கம்பனும் பல்வேறு இராமாயணங்களும் ேே 17. எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணொடு கண்இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார். - கம்ப. 514; 515. (எண்ண அரும் நலத்தினாள்- எண்ணிப் பார்ப்பதற்கும் அரிதாகிய நற்பண்பும் அழகும் கொண்ட சீதை இனையள் - இவ்வாறாக பாசத்தால் - கயிற்றால், விருப்பத்தால் வரிசிலை - வார்கள் இழுத்துக் கட்டப்பட்ட வில் வாட்கண் - வாள்போன்று கூரிய நோக்குடைய கண்.) - 'மதி உடம்படுதல்' என்ற சொல் அகத்திணையில் பயிலப்படும் ஒரு சொல்லாகும். அதாவது, தலைவி அல்லது தலைவனுடைய மதியைத் தன் மதியுடன் ஒன்றாக இணைத்து அவர் கருத்தை அறிதல் என்று பொருள்படும். நச்சினார்க்கினியரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட இப்பாடலில் 'மதியுடம்பட்ட மடக்கண் சீதை' என்றுமட்டுமே வருகிறது. மடக்கண் சீதை என்று சீதையின் கண்ணுக்குச் சிறப்புத் தந்து கவிஞன் அதனை அடையாகக் கூறினானாயினும், அவள் இராமன் மனக்கருத்தை (மதியுடம் படுதற்கு) அறிதற்குத் தன் கண்ணையே பயன்படுத்தினாள் என்ற கருத்தை நுண்மையாக விளங்கவைக்கின்றான். இந்த நுண்ணிய கருத்தை விளக்கிக்கொண்ட கம்பன் அதனை விரித்துக் கூறுமுகமாக ஒர் அற்புதமான நிகழ்ச்சியைப் படைத்துக் காட்டிவிடுகிறான். இராமன் வில்லை முறித்து விட்டான் என்ற செய்தியை நீலமாலை என்ற தோழி வந்து சீதையிடம் கூறுகிறாள். அ-2
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை