அனுமனும் இராமனும் ே 345 நீ என்னைத் தழுவிக் கொள் என்று சொல்லிய இடம் இது ஒன்றுதான். அருளின் நோக்கி, நீ என்னைத் தழுவிக் கொள் என்று சொல்வது சற்றுப் புதுமையானதுதான். இறைவனுடைய அருள் நோக்கம் பெற்றவர்கள் அவன் திருவடிகளில் சென்று சேர்வர் என்றுதான் இதுவரை கேட்டுள்ளோம். இங்கு அருளின் நோக்கியவன் தொண்டனிடம் வந்து உன்னுள் நான்புக விரும்புகிறேன் என்று கூறுவது போல, நீ என்னைப் புல்லுக என்று கூறுவது இராமகாதை முழுவதிலும் யாருக்கும் கிடைக்காத சிறப்பாகும். பக்தர்கள் இறைவனின் திருவடிநீழலில் சென்று தங்குவதற்கு பதிலாக, இறைவன் திருவடி தானே தேடிவந்து ஒரு தொண்டனுடைய இதயத்துக்குள் புக விரும்புகிறது என்றால் அத் தொண்டனின் பெருமையை அந்த இறைவன்தான் அறியமுடியுமே தவிர, நம் போன்றவர்களின் கற்பனைக்கும் அடங்காததாகும். முடிவாக... மூலநூல் உள்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத முறையில் தமிழ் இலக்கியங்களில் கூட கம்பனுக்கு முன்னும், பின்னும் இப்படி ஒரு பாத்திரம் படைக்கப்படவில்லை என்பது அறிந்து மகிழ்வதற்குரியதாகும். மாபெரும் கல்வியும், அதன் பயனாக வாலறிவனை அறிந்துகொண்டு அவனுக்குத் தொண்டனாகும் பண்பும், ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் திறனும் அகங்கார மமகாரங்கள் அறவே இல்லாத ஒர் இயல்பும், தனக்கென வாழா பிறர்க்குரியாளனாகத் தொண்டு செய்யும் பண்பும் ஆகிய இவை அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவம் அனுமன் என்ற பெயருடன் கம்பனால் படைக்கப்பட்டிருப்பது மனித சமுதாயத்திற்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்குவதாகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/365
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை