398 ேே. இராமன் - பன்முக நோக்கில் 'உலகம் யாவையும் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலுமாகிய அலகிலா விளையாட்டு உடைய தலைவ'னின் அவதாரச் செயற்பாடு இராவண வதத்திலே ஒர் எல்லையிட்டு நிறைந்தது. முடிவாக "இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் என்று உளர் சிலர்; அவர் அறத்தின் நீங்கினார்." இது அரக்கர் பற்றிய பொதுவான விளக்கம். அவர்களிடையே தவ மேன்மையும் மறைப்பொருள் உணர்ந்த அறிவும், அளவில் ஆற்றலும் கொண்டோர் மிகப் பலர். தவத்தாலும் தறுகண்மையாலும் பெற்ற ஆற்றல்களைத் தவறாகப் பயன்படுத்தியதாலேயே அழிக்கப்பட வேண்டியவராயினர். அதே ஆற்றல்களைப் பெற்ற அரக்கரிடையே அந்தணன் போல வாழ்ந்த வீடணனும் உண்டு. அரக்கர் சாதியான்; ஆயினும் சாதியால் வந்த சிறுநெறி அறியாதான். ஆதலின், பரதனுக்குக் கிடைத்த ஆழ்வார் பட்டம் அவனுக்கும் கிடைத்தது. இறுதிவரை தன் ஆணவம் அழிய விடாத இராவணன் ஒரு துருவம்; வீடணன் இன்னொரு துருவம். இரண்டு துருவங்களுக்கும் இடைப்பட்ட பீடத்தில் இருந்தவன் கும்பகருணன். விசுவாமித்திரன் வேள்வியின் போது இராமன் கணைபட்டுத் தப்பிய மாரீசன் இவர்கள் அனைவரினும் தனி நிலையினன் ஆவான். இராம பாணத் தீட்சையால் அகம் மாறித் தவநெறி பூண்டான்; ஆனால், இராவணனுக்கு உதவ முனைந்து மானாகி மாண்டான். தாடகையும், சூர்ப்பணகையும் இராவணக் கூட்டத்தின் பெண்மைப் பதிப்பு: மண்டோதரி, திரிசடை ஆகியோர் வீடணத்தின் பெண்மைப் பதிப்பு. இவ்வாறு இராம காதையின் தலைவனுக்கு எதிரணி வகுத்து அவதார தத்துவத்தை நாம் உணர்வதற்கு உதவியவர்கள் அரக்கர்கள் என்பதைக் கண்டோம்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/419
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை