பரம்பொருளும் இராமனும் ேே 441 தோன்றி, இருந்து, என்றோ ஒரு நாள் அழியும் இயல்புடையன. அழிதல் என்பது இன்றுள்ள நிலை மாறி வேறு நிலையை அடைவதாகும். அதாவது, இவை இன்றுள்ள வடிவில் இல்லாதிருந்த காலமும் உண்டு; இனி இல்லாமல் போகும் காலமும் உண்டு. எனவே, தோற்றம் முதலியன உடைய இவற்றைக் குறிக்கும்பொழுதுமட்டும் மூலமும், நடுவும், ஈறும் உடையவை இவை என்றான். ஆனால், இவற்றை இந்நிலையில் படைத்து, காத்து, மறைத்து அழிப்பவன் இவை தோன்று முன்னரும் இருந்தான்; இன்னும் இருக்கிறான். சர்வசங்கார காலத்தில் இவை அழிந்த நிலையிலும் இருக்கப்போகிறான். எனவே, இவற்றை அளவுகோலாக வைத்துப் பேசும்பொழுது மூலமும், நடுவும், ஈறும் இல்லாதவன் என்று பேசினான். ஆனால், கால தத்துவம் இதுபோன்றதன்று. அது என்றுமே உள்ள ஒன்றாகும். தொடக்கமும் முடிவும் இல்லாமல் சங்கிலித்தொடர்போல் விளங்கும் கால தத்துவம் என்றும் இருக்கும் பொருளாகும். ஆதலால், இறைவனையே கால தத்துவம் என்று கூறுகிற மரபும் இந்நாட்டில் உண்டு. ஞாலமே, விசும்பே, இவை வந்துபோம் காலமே! உனை என்றுகொல் காண்பதே - திருவாசகம் - திருச்சதகம் - 43 ஞாலம் என்ற முதல் பூதத்தையும், விசும்பு என்ற ஐந்தாவது பூதத்தையும், மணிவாசகர் குறிப்பிட்டதால், இடையில் உள்ளவற்றையும் சேர்த்து ஐந்து பூதங்களும் தோன்றி மறைவது காலதத்துவம் என்று கூறுப்படுகிறது. இதனைத்தான் கம்பநாடான் மும்மைத்தாய காலமும் கணக்கும் நீத்த காரணன்' என்று கூறுகிறான். நீத்த என்றால் கடந்த என்பதே பொருள். இறைவனை ஐந்து பூதங்களாகவும், அவை அனைத்தும் தோன்றி மறையும் காலதத்துவமாகவும் கூறுவதுடன், இவற்றைக் கடந்து நிற்பவனாகவும் கூறுதல் இந்நாட்டு மரபு. 'கட' என்றதால் இவற்றைக் கடந்தவன் என்பதும், 'உள்' என்பதால் அந்தர்யாமியாய் இவற்றின் உள்ளே உள்ளான் என்பதும் இந்நாட்டவர் கண்ட கொள்கை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/462
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை