2. கம்பனின் காப்பிய நோக்கம் கம்பன் கண்ட பல இராமாயணங்கள் கம்பனையே மூலமாகக் கொண்டு அவன் படைத்த இராமனைப் பற்றி ஆய்வதே இந்நூலின் நோக்கம் ஆகும். ஆதலால், அவன் காலத்திற்கு (9ஆம் நூற்றாண்டு) முன்னர் வடமொழி, தென் மொழிகளில் இருந்த இராமசரிதங்கள் எந்த அளவிற்குக் கம்பனுக்கு உதவின என்று காண்பது பயனுடையதாகும். தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் சங்கப் பாடல்கள் சிலம்பு, மணிமேகலை, ஆழ்வார்கள் பாசுரங்கள் ஆகியவற்றில் உள்ள இராமன் பற்றிய சில குறிப்புகளை ஒரளவு எடுத்துக் காட்டியுள்ளோம். கம்பனுக்கு மூலமாக இருந்த வான்மீகியின் நூல், அதே கி. மு. 5ஆம் நூற்றாண்டுவாக்கில் புத்த சமய அடிப்படையில் தோன்றிய தசரத சாதகக் கதைகள் மூன்று, கி.பி.4ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய காளிதாசர் இரகுவம்சம், விமலசூரியின் பெளம சரிதம் என்பவை போக, இரண்டாம் நிலையில் உள்ள இரவிசேனர் (கி.பி.6), குமாரதாசர் (கி.பி.8) என்ற இவர்களுடைய சிறுநூல்களும் கம்பனுக்கு முன்னர்த் தோன்றியவை ஆகும். பெளத்த, ஜைன இராமன் கடவுட்கொள்கையை ஏற்காத பெளத்த, ஜைன இராமாயணங்களில் இராமனை நற்பண்புகளின் உறைவிடமாகக் காட்டுவதோடல்லாமல் அவரவர்கள் சமயக் கொள்கைகளைப் போற்றி வளர்க்கும் ஆதார புருஷனாகவும் காட்டப்பட்டுள்ளான். கம்பனுக்குப் பின்னே வந்த பல புராணங்களும் மகா விஷ்ணுவின் அவதாரமாக இராமனைக் காட்டுகின்றன.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை