அணிந்துரை முனைவர். தெ. ஞானசுந்தரம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு உலகத்தில் தமக்கெனத் தனியிடத்தைத் தகுதியால் தேடிக்கொண்ட பெருந்தகை பேராசிரியர் அ.ச.ஞா. ஆவார். அவர் பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர். தமிழுக்குத் திறனாய்வுத் துறையினை அறிமுகப்படுத்திய முன்னோடி களுள் அவரும் ஒருவர். ஆங்கில இலக்கிய மாணாக்கர்களுக்கு அட்சனின் இலக்கியத் திறனாய்வு' போலத் தமிழ் இலக்கியம் பயில்வார்க்கு அவர்தம் இலக்கியக்கலை தடங் காட்டும் இலக்கியக் கைகாட்டி நம் பேராசிரியர் நிறைந்த புலமையாளர். சங்க இலக்கியம் தொடங்கிப் பாரதிதாசன் பாடல்கள் வரை கற்றுத் துறை போகியவர். அவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் தோய்ந்தவர். இவற்றைத் தவிர வேறொரு தனிச்சிறப்பும் அவர்க்கு உண்டு. அவர் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகியவற்றையும் கற்றறிந்தவர். இலக்கியத் திறனாய்வாளர்க்குத் தேவையான பரந்த கல்வி, ஆழ்ந்த அறிவு, அறிவியல் பார்வை இவையனைத்தும் ஒருங்கே வாய்க்கப் பெற்றமையால் தேர்ந்த திறனாய்வாளராகத் திகழ்கிறார். பெரும்பாலும் எழுத்தாளர்கள் பேச்சாளர்களாகவும், பேச்சாளர்கள் எழுத்தாளர்களாகவும் இருப்பது இல்லை. இதற்கு விதிவிலக்குப் பேராசிரியர் அ.ச. ஞா. அவரது பேச்சு எழுத்திற்கும், எழுத்துப் பேச்சிற்கும் மெருகூட்டுவனவாய் அமைந்துள்ளன.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை