பேராசிரியர் தமிழ்க்கவிஞர்கள் பலரிடத்தில் நெஞ்சம் பறிகொடுத்தவர் என்றாலும் அவர் நெஞ்சில் முழுமையாக நிறைந்து நிற்பவர்கள் கம்பநாடரும் தெய்வச் சேக்கிழாருமே ஆவர். இவ்விரு பெரும்புலவர்களின் படைப்புக்கள் பகுத்தறிவாளர்களால் சமூகக் கட்டாயத்தினால் கடுமையாக எதிர்க்கப்பட்ட காலத்தில் இவற்றின் சீர்மைகளை அஞ்சாது எடுத்துக்காட்டிய நெஞ்சுரம் மிக்க தமிழாய்ந்த பெருமக்களுள் குறிப்பிடத் தக்கவர் அவர். அவரது சிறந்த படைப்பே 'இராமன் - பன்முக நோக்கில்' என்னும் இந்நூலாகும். பேராசிரியர் தம் வாழ்வின் காலைப் பொழுதில் எழுதிய நூல் 'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்'. அஃது இராவணனைச் சிறப்புற எடுத்துக்காட்டுவது. அவர் தம் வாழ்வின் மாலைப்பொழுதில் வடித்துள்ள நூல் இராமன் பன்முக நோக்கில் என்பது. இஃது இராமன் பெருமைகளைப் பல்வேறு கோணங்களில் நோக்கிக் கொண்டாடுவது. பரபக்கம் பேசிச் சுபக்கம் நிலைநாட்டும் சமயக்கணக்கர் போல, அதில் எதிர்த்தட்டுத் தலைவனின் இயல்புகளைக் காட்டி இதில் இராமனின் உயர்ந்த பண்புகளை நிலைநிறுத்துகிறார். இராமன் காப்பியத்தில் இரு நிலைகளில் காட்சி தருகிறான். ஒன்று அவன் பரம்பொருள், மற்றொன்று அவன் மனிதன். இவ்விரு நிலைகளிலும் அவன் செயல்கள் எவ்வாறு சிறப்புற்று விளங்குகின்றன என்பதைக் காட்டுவதே நூலின் உயிர்த்துடிப்பாக அமைந்துள்ளது. பேராசிரியர் பரம் பொருளை மூல இராமன் என்றும், அவன் மனிதனாக உலவும் கோலத்தினை தசரத இராமன் என்றும் குறிப்பிட்டு வேறுபடுத்திக் காட்டுகிறார். ஒரே நேரத்தில் ஒருவனைக் கடவுளாகவும் மனிதனாகவும் படைப்பது மிக அரிய செயல். அப்படிப் படைத்தவர்களில் பெரும்பாலோர் தம் முயற்சியில் வெற்றி பெறவில்லை. ஆனால் கவிச்சக்கரவர்த்திக் கம்பநாடர் பெருவெற்றி பெற்றுள்ளார். இதுவே நூல் உரத்த குரலில் முழங்கும் ஆய்வு முடிவு.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை