பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் - V
1) ஆலய நிர்வாகம்


சீரும் சிறப்புமிக்க இராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகம் பற்றித் தொலை நோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டவர் சேதுபதி மன்னர் சடைக்கன் உடையான் சேதுபதி (கி.பி.1602 - 1622) ஆவார். பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகக் கோவில்களில் எங்கும் இல்லாத முறையில் மகாராஷ்டிரப் பிராமணர்கள் 512 பேர்கள் இராமேசுவரம் திருக்கோவிலின் பூஜை (வழிபாடு) ஸ்தானிகம் (கண்காணிப்பு) பரிசாரகம் (திருவமுது படைத்தல்). சுயம்போகம் ஆகிய பணிகளை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் யாருடைய ஆனையின் பேரில் நியமனம் பெற்றனர் என அறியத்தக்க ஆவணம் இல்லை என்றாலும். இந்த இறைப் பணியாளர்களுக்கு அவசியமான வீட்டு வசதிகளை இந்த மன்னர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.[1]

ஆதினகர்த்தர் நியமனம்

ஆண்டு முழுவதும் சேது யாத்திரையாக வடபுலத்தினின்றும். பயணம் முழுவதும் நடந்தே இராமேசுவரம் திருக்கோவிலுக்கு வருகின்ற நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு வழியில் ஆறலைக் கள்வர்களால் இழப்பு ஏற்படாத வண்ணம் சேது மார்க்கத்தில் பாதுகாப்புப் பணியினைச் சிறப்பாகச் செய்து இருந்தார்கள் சேதுபதி மன்னர்கள். மதுரை


  1. கபால் எஸ்.எம் டாக்டர் சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1993