பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞன் வீழ்ச்சி 211 நகைபிறக் கின்ற வாயன் நாக்கொடு கடைவாய் நக்கப் புகைபிறக் கின்ற மூக்கன் பொறியிறக் கின்ற கண்ணன் மிகைபிறக் கின்ற நெஞ்சன் வெஞ்சினத் தீமேல் வீங்கி சிகைபிறக் கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான் (கம்பன் - 9635, 9641) எதிர்பாராதது நடந்துவிட்டது, எத்துணைமுறை கண்களைத் துடைத்துக்கொண்டு நோக்கினும், கும்பகருணனும், மேகநாதனும், மூல பலமும் அழிந்த உண்மை நன்றாக விளக்கமடைகின்றது. கும்ப கருணனும் மேகநாதனும் இறப்பதற்கு முன் நாங்கள் இறந்த பிறகாவது உண்மையை உணர்ந்து சீதையை விட்டு விட்டுச் சுகமாக இரு' என்று கூறிப் போனார்கள். இதனையே மாலியவான் மீண்டும் வற்புறுத்தினான். ஆனால், அவ்வாறு செய்வதால் பயன் என்ன? சீதையை அனுப்பிவிடுவதால், இறந்த தம்பியையும் மக்களையும் திரும்பப் பெற முடியுமா? முடியாது என்பது தேற்றம். இராவணன் உயிர் வாழ்வதாலேதான் என்ன பயன்? முக்கோடி வாணாளுடன் இன்னும் பலயாண்டு வாழ்தல் பெருமை தரக்கூடியதா? சீதையை அடைய முடியாது என்பது உண்மையேயானாலும், இப்பொழுது தம்பி, மகன், மூல பலம் அனைத்தும் அழிந்த பிறகு அவளைத் திருப்பி அனுப்புதல், பழியையே தருமன்றோ? 'இராவணன் உயிருக்குப் பயந்து சீதையை அனுப்பி விட்டான்' என்றல்லவா உலகம் பேசும்! ஆகவே, போர் செய்வதே தகுதியுடையது. இப்போரின் நோக்கம் சீதையைப் பெறுவதன்று; பழி வாராமற் காத்தலே. இராவணன் இம்மன நிலையுடனேயே போருக்குச் சென்றான் என்பதை, அவன் சிவ பூசை செய்த பின் போருக்குப் புறப்பட்டதும், அவன் செய்த சபதமும் வலியுறுத்துகின்றன.