பக்கம்:இராவண காவியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட தளபதி,

திரு, சி. என். அண்ணாத்துரை M. A. அவர்களின்

முன்னுரை

இராவண காவியம்- திடுக்கிடுகிறீர்களா? அப்படித்தான் இருக்கும், பன்னெடுங் காலமாக இராமாயணம் படித்தும், படிக்கப் பக்க நின்று கேட்டும் வந்த மக்களல்லவா! அவர்களின் செவிக்கு. இராவணகாவியம் என்ற ஒலியே சற்றுக் கிலி தருவதாகத்தான் இருக்கும், எனினும், இந்நூல், எதிர் பாராததல்ல. காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, என்று பல கூறலாம் இதற்குக் காரணமாக, இது போல் ஒரு நூல் வெளி வந்தே தீரும் என்பதை, நாட்டு மக்களின் உள்ளத்தின் போக்கிலே ஏற்பட்டுவரும், புதிய எழுச்சியை அறிந்தோர், அறிந்திருந்தனர், புரட்சிக் கவிஞர் பயரதிதாசன், இதனை அறிவித்தே விட்டார் பல ஆண்டுகளுக்கு முன்னரே.

“தென் திசையைப் பார்க்கின்றேன் என்செய்வேன் எந்தன்
சிந்தை யெலாம் தோள்களெலாம் பூரிக்கு தட்டா!”

இராவணகாவியம், புரட்சிக் கவிஞரின் புதுக் கவிதைபோல, புதிய தமிழகத்தின் ஓவியம். இதனுடைய நோக்கம், முன்னுள்ள ஏடுகளின் மூலம் ஏற்பட்ட கேடுகளைக் களைந்து, இந் நாள் நினைவுக்கேற்ப, அவற்றினை ஆராய்ந்து, புது உருவாக்கித் தருவது. பழைய உருவிலே பற்றுக்கொண்டோருக்கு இஃது - பயங்கரப் புயலாகத் தோன்றும். இதனை, ஆக்கியோர் அறிவார், மனித இயல்பறிந்தோர் ஆச்சரியமும் கொள்ளார். இராம நவமி கொண்டாடும் நாட்களிலே, நாட்டிலே, இராவண காவியம் ஆக்கப்படுவது, அதிசயம் என்று கருதிப் பயனில்லை, அறிவிப்பு என்று கொள்ளவேண்டும்-பழமை மடிகிறது என்பதற்கான அறிவிப்பு, ஜாரின் கொடுமை உண்டாக்கிய சூழ்நிலையே தான் ஒரு லெனின் தோன்ற முடிந்தது. தோன்றினதால் தான், யார் தேவகுமாரன் என்று தேய்த்தினரால் வணங்கப் பட்டு வந்தானோ அவன், மக்களின் இரத்தத்தை உறிஞ்சிடும் 'பேயன்' என்று ஏற்பட்டது. ஜார் இல்லையேல் லெனில் இல்லை! அவசியம் இராது!! அஃதே போல், இராமாயணத்திற்கு ஆக்கம்தேடி முனைவோரும், சித்திரம் தீட்டிடுவோரும், சிறு கட்டுரை யாக்கிடுவோரும் இன்று புதுக்கூத்தாட முற்பட்டிருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/13&oldid=1030195" இலிருந்து மீள்விக்கப்பட்டது