பக்கம்:இராவண காவியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர் தம் கேள்விகட்குத் தக்கவிடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இரமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரே யொழிய, மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர்- மதிப்பர்-வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே!

தன்மான இயக்கத்தவர்-இராவண தாசர்களல்லர்! இராவணனுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித்துப் பூஜாரிகளாகவேண்டும் என்பதற்காக அல்ல இக்காவியம் புனைந்தது. பழி சுமத்தினரே பண்டைக் கவிஞர்கள் இரவணன் மீது, இது முறையல்லவே, துருவிப் பார்க்குங்கால், விஷயம் முற்றிலும் வேறாகவேயன்றோ உளது என்று எண்ணித் தீட்டியதே இந்த ஏடு.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும், மயக்க நீக்கு மருந்து இது. "தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்கு வதற்கே பயன்படும் நண்பா!" என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துளது.

இராமாயணம் தீட்டப்பட்ட காலம், இந்தப் பரந்த பூபாகத்திலே இரு வேறு கலாச்சாரங்கள் மோதத் தொடங்கிய நேரம். இது பண்பாடு, மக்கள் உளநூல், நாட்டுநிலை அறிவோர், அறிந்தோர் கண்ட உண்மை.

திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக்கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமிலை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோ மில்லை. ஏனெனில், இது மறைக்க முடியாத உண்மையாகி விட்டது.

திராவிடம்-ஆரியம் எனும் இருவேறு பண்பாடுகள் இருந்தன-கலந்தன. இதனை அவர்களும் கூறுகின்றனர். எது திராவிடம், எது ஆரியம் என்று பிரித்துக்காட்டக் கூடாதவாறு கலந்துவிட்டது, எனறு முறுவலுடன் கூறுவர், பிரித்துக் கூறுவர். பிரித்துக் கூறக்கூடாது என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது மட்டுமல்ல, அவர் தம் ஆராய்ச்சியாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/15&oldid=1536872" இலிருந்து மீள்விக்கப்பட்டது