பக்கம்:இருட்டு ராஜா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்109

 எங்கே போவான்? இதே மாதிரி ஒதுக்குப்புறமான கோயில் இருக்கக் கூடய ஊர் எதையாவது தேடித்தான் போயிருப்பான். கூட்டாளிகள் அங்கங்கே இருப்பார்கள். பணம் திரட்ட வேணுமல்லவா?

தொடர்ந்து அவன் மனம் திரிபுரத்துக்காக வருத்தப்படும். அவனுள் இன்னது என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு வேதனை கவிந்து வளரும்.

“தங்கராசு குறிப்பிட்டது போல, நாரம்பு திரிபுரத்தை அழைத்துக் கொள்ளாமலே இருந்து விடுவானோ?” என்ற சந்தேகமும் அடிக்கடி தலை துக்கியது.

அப்படி நடந்தால், திரிபுரமும் “வாழா வெட்டி” என்ற பட்டத்தைப் பெறுவாள். இந்த ஊர் வாழாவெட்டிகளுக்கு பேர் போனது! இப்பவே பலபேர் அந்த நிலையில் இருக்கிறார்கள். பத்தோடு பதினொண்ணு; அத்தோடு இதுவும் ஒண்ணு என்று திரிபுரமும் சேர்ந்து கொள்ளுவாளோ என்னமோ!

அந்தநிலை ஏற்பட்டால், அதுக்கு அவளா பொறுப்பு என்று கேட்டது முத்துமாலையின் மனம், பெண்களே குற்றம் செய்து விட்டதுபோல் தான் ஊர்காரர்கள் பழிக்கிறார்கள்; பரிகாசம் பண்ணுகிறார்கள். உண்மைக் காரணம் வேறாகத்தான் இருக்கும். புருஷன்காரன். மாமியார், அவர்கள் சொந்தக்காரர்கள், அவர்களுடைய குணங்களும் போக்குகளும் என்று பலப்பல கோளாறுகள் இருக்கும்...

அதை எல்லாம் எண்ணி எண்ணி மனம் குழம்பினான் முத்துமாலை. அவனது மனக் கலக்கத்தை அதிகப்படுத்துவது போலவே ஊரிலும் சம்பவங்கள் நிகழ்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/111&oldid=1139773" இலிருந்து மீள்விக்கப்பட்டது