பக்கம்:இருட்டு ராஜா.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136இருட்டு ராஜா


பணம் பிடுங்கி விடுவார்கள். பின்னே எனன செய்வது? “பெரிய ஆஸ்பத்திரி” க்குப் போனால், அக்கப்போர்கள் அதிகம் ஆகும். தற்கொலை முயற்சி என்று வழக்கு தொடரப்படுமே! அது வேறு அலைச்சல், பணச் செலவு, மற்றும் பல சிரமங்கள்.

ஆஸ்பத்திரிக்குப் போயும் பிழைக்காமல் போகிறவர்களும் உண்டு.

மருந்து குடித்து செத்துப் போகும் நபரின் உடலை சட்டுப் புட்டென்று பைசல் பண்ணுவதில் எல்லோரும் அதிக அக்கறை காட்டுவதும் வழக்கமாக இருந்தது. வேண்டாதவர், பிடிக்காதவர்,வம்புபண்ணுகிறவர் எவராவது போலீசுக்கு ரிப்போர்ட் பண்ணி, போலீஸ் வந்து விட்டால், இருக்கிறவங்க பாடு தானே திண்டாட்டம், எனவே, அவசரம் அவசரமாக மயானத்துக்குக் கொண்டு போய் வரட்டி, கட்டை, வைக்கோல் முதலியவற்றை தாராளமாக உபயோகித்து—அவசியமானால் மண் எண்ணையையும் பயன்படுத்தி—வேகம் வேகமாகக் காரியத்தை முடித்து விடுவார்கள்.

இந்த இனத்தில் வளர்மதியும் சேருவாள் என்று முத்துமாலை சொப்பனத்தில் கூட நினைத்ததில்லை. ஆனாலும், அந்தப் பெண் அப்படித் தான் போய்ச் சேர்ந்தாள்.

அவளுக்கு வாழ்க்கை அலுத்துப் போய்விட்டது, பாவம்! அப்பா, அம்மா அவளை குறை சொன்னதில்லை. இவள் விதி இப்படி இருக்கே என்றுதான் அவர்களும் குமைந்து புழுங்கினார்கள். அக்கா தங்கச்சிமார் சண்டை அவ்வப்போது தலைகாட்டும். தங்கச்சிகளில் எவளாவது ஒருத்தி குத்திக் காட்டுவது போல் சொல் வீசுவதும் வழக்கம்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் யாராவது குதர்க்கமாகப் பேசி, அவள் மனவேதனையை அதிகப் படுத்துவதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/138&oldid=1140147" இலிருந்து மீள்விக்கப்பட்டது