பக்கம்:இருட்டு ராஜா.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58இருட்டு ராஜா

 முத்துமாலை எழுந்திருக்கவில்லை. நல்ல தூக்கம்.

அவள் வாசல் தெளித்து, கோலம் போட்டாள். வீட்டைப் பெருக்கினாள். அடுப்படியை ஆராய்ந்தாள். தேவையான பொருள்கள் எல்லாம் இருந்தன. தயக்கமின்றி எடுத்து, காப்பி போட்டு உப்புமாவும் தயாரித்து முடித்தாள்.

“என்ன, வாசனை வீட்டையே துக்கிட்டுப் போகுதே!” என்ற வியப்போடு எழுந்த முத்துமாலை அடுக்கலைக்குள் எட்டிப்பார்த்து ஆச்சரியப்பட்டான்.

“பல் தேச்சுட்டுவாங்க காப்பி சாப்பிடலாம்” என்று உபசரித்தாள் அவள். “உங்களுக்கு குளிக்க வெந்நீர் போடணுமா?” என்று கேட்டாள்.

“உனக்கு வேண்டிய வேலையை நீயே தேடிப்பிடிச்சுக் கிட்டே இல்லையா?” என்று சிரித்தான் முத்துமாலை.

வெட்கமும் மகிழ்ச்சியும் விளையாடிய அவளுடைய முகம் வசீகரமாகத் தான் காட்சி தந்தது.

“சரி, நீ இஷ்டப்பட்டால், உனக்கு இங்கே இருக்க பயம் எதுவும் இல்லையானால், தாராளமா நீ இந்த வீட்டின் வேலைகளைச் செய்து கொண்டு இங்கேயே இருக்கலாம். வீட்டின் பின் பகுதி தனிக்குடித்தனத்துக்கு லாயக்கானது தான். எங்க அம்மா இருந்தபோது சில சமயம் யாருக்காவது வாடகைக்கு விட்டது உண்டு. அதுக்குப்பிறகு நான் யாரையும் வாடகைக்குக் குடி வைக்கலே. அந்தப் பகுதியிலே நீ தங்கியிருக்கலாம். என்னைப் பத்தி ஊரிலே பலவிதமாப் பேசுவாங்க. எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு மனசுக்குப் பிடிக்கிற காலம் வரை நீ இங்கே வசிக்கலாம். எனக்கு எந்தவிதமான ஆட்சே பணையும் இல்லே” என்று சொல்லிவிட்டு அவன் பல் விளக்கப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/60&oldid=1139118" இலிருந்து மீள்விக்கப்பட்டது