பக்கம்:இருட்டு ராஜா.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்விக்கண்ணன்91

 ரொம்ப நேரம் உருட்டிப் புரட்டி, தட்டி சத்தம் போட்டு எழுப்பிய பிறகு அவனுக்கு விழிப்புக் கண்டது. “ஏன் இப்ப காட்டுக் கூப்பாடு போட்டு என்னை எழுப்புதே? வீடா தீப்புடிச்சிக்கிட்டுது?” என்று எரிந்து விழுந்தான்.

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்: “வீடு பத்தி எரியலே. அம்மன் கோயில் பந்தல் தான் எரியுது”

“என்னது பந்தல்லே, தீயா?” என்று பதறி எழுந்தான் முத்துமாலை. “நேத்தே பந்தலைப் பிரிக்கும்படி சொன்னேன். ரெண்டு நாள் கழிச்சுப் பிரிக்கே னேன்னு சொன்னான். சவத்துப் பயலுக்குப் பொறந்த பய எவன் அதிலே தீவெச்சான்?” என்று முனகிக்கொண்டு வேகமாக நடந்தான்.

எரிந்து கருகிய சாம்பலையும், புகையும் சில மூங்கில் கழிகளையும் தான் அவன் கண்டான். கும்பலையும் பார்த்தான். என்ன செய்வது என்று புரியாமல் சும்மா சுற்றி வந்தான்.

“என்ன முத்துமாலை இப்படி நடந்து போச்சு? தீ எப்படிப் பிடிச்சிருக்கும்? எவன் வச்சிருப்பான்?” துக்கம் விசாரிப்பது போல் ஆளுக்கு ஆள் அவனிடம் கேட்டார்கள்.

அவனுக்கு எரிச்சல் வந்தது. “எனக்கென்ன தெரியும் நானும் உங்களை மாதிரித்தான். எவன் தீ வச்சானோ? அவன் விளங்கமாட்டான்! தனது ஏலாத்தனத்தை எரிச்சலோடு சாபம் கொடுத்து வெளிக்காட்டிக் கொண்டான்.

ஊர்காரர்கள் எதுவும் செய்ய இயலவில்லை. என்றாலும், எல்லோராலும் தாராளமாகப் பேச முடிந்தது. முன்பு எப்பவோ எங்கெங்கோ பிடித்து எரிந்த தீ விஷயங்களை சுவாரஸ்யமாக விவரித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/93&oldid=1139483" இலிருந்து மீள்விக்கப்பட்டது