பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு



8

பிள்ளை நிலைக்குக் காரணம் தோன்றிவிட்டது தலைவிக்கு !


தந்தியும் ஆணியும் தளர்ந்த வீணைபோல்
கூடத்து நடுவில் வாடிய சருகுபோல்
பெரியவன் பாயில் சுருண்டு கிடந்தான்
என்பு முறிந்த வன்புலி யுடம்பைக்
கன்மேல் கிடத்திய காட்சி போல
ஓய்வுடன் தலைவர் ஒருபக் கத்தில்
சாய்வுநாற் காலியில் சாய்ந்து கிடந்தார்.



வயிற்றின் உப்பலால் வாயிலாக் குழந்தை
உயிரை இழக்க ஒப்பாது கிடந்தது!


நடை வீட்டினிலே கடையின் கணக்கன்
நெடுந் தூக்கத்தில் படிந்து கிடந்தான்
வேலைசெய் வோர்கள் மூலையில் குந்தி
மாலை நேரத்தின் வரவுபார்த் திருந்தனர்.



இல்லத் தலைவி எண்ண லானாள்:
குழந்தை யுடம்பில் கோளா றென்ன
வளர்க்கும் முறையில் மாற்ற மில்லையே
களிம்புறு பித்தளை கைப்படக் கைப்பட
விளங்குறும் அதுபோல் வேளை தோறும்
கனிநிகர் உடம்பில் கண்ணை வைத்துப்
பனிபிணி யின்றிப் பார்க்கின் றேனே

11