பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

எனப்பல வாறு நினைக்கும் போது
நெட்டை யன் தலை குட்டை இறைப்பினில்
பட்டதைப் போல்அப் பாவையின் நெஞ்சில்
பட்டதோர் எண்ணம்! பார்வை திரும்பினாள்
"மந்திரக் காரன் வரட்டும்" என்றாள்
அந்தச் சங்கிலி "அவர் ஏன்" என்றாள்.
இந்த வீட்டில் இருளன் புகுந்ததால்
நொந்தது குழந்தை நோயால் என்றாள்.
வாலன் என்னும் மந்திரக் காரனை
அழைக்கின் றேன்என் றறைந்தாள் சங்கிலி !
"சரிபோ!" என்று தலைவி சொன்னாள்!
நாழிகை போக்காது நடந்தாள் சங்கிலி !
"ஏழரை ஒன்ப திராகு காலம்
இப்போது வேண்டாம்" - என்றான் தலைவன்;
வீட்டின் அரசியும் வேண்டாம் என்றாள்.
நடந்த சங்கிலி நன்றெனத் திரும்பினாள்.
வேலைக் காரியும் வீட்டின் தலைவியும்
நாலைந்து கடவுளின் நற்பெயர் கூறிக்
காப்பீர் என்று காப்புங்கட்டி
வேப்பிலை ஒடிக்கும் வேலையில் நுழைந்தார்.

12