பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

எதையோ கண்டு பதைத்தது நாய் என்று
மதமத வென்று மல்லாந்திருந்தனர்!
சிறிது நேரம் சென்ற பின்னர்
நிறையப் பணத்தாள், நிறையப் பணங்கள்
போட்டுக் கட்டிய பொத்தற் பைகளைக்
கையில் தூக்கினான் கரிய திருடன்;
பொத்தல் வழியே பொத்தென்று சிற்சில
வெள்ளிக் காசுகள் வீழ்ந்த ஓசை
அனைவர் காதையும் அசைத்த தேனும்
"தலைவர் எதையோ தடவு கின்றார்
என்று தலைவி எண்ணியிருந்தாள்;
தலைவி பாக்குத் தடவினாள் என்று
தலைவர் நினைத்துச் "சரி" என் றிருந்தார்
பெருச்சாளி என்று பெரியவன் நினைத்தான்.
திருடன் துணியொன்று தேடி, அதிலே
பெரும்பணப் பையைப் பெயர்த்து வைத்துக்
கட்டி இடது கையிற் பிடித்து
வலது கையில் வைத்தான் கத்தியை!

40