பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இரும்பு

ஜெர்மனி வெற்றிகளை ஈட்டிக் கொண்டு, ஆணவத்தைக் கக்கிக் கொண்டிருந்த கட்டம் முடிந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது; பல இடங்களிலே தோல்வி கண்டு திணறிக் கொண்டிருந்தது; ஜெர்மானியர் பலர் கைதாயினர்.

அந்தக் கைதிகளை, இந்தத் தீவிலே கொண்டு வந்து சிறை வைக்க ஏற்பாடாகிறது.

காட்டு மிராண்டிகள், வருகிறார்கள்; இங்கு நாம் இருக்கக்கூடாது என்று எண்ணி அந்தத் தீவிலிருந்து பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. சில குடும்பத்தினர் தீவிலே தங்கினர்; என்றாலும் பெண்களை மட்டும் வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டனர்.

"இங்கு ஏன் அந்த இழிமக்களைக் கொண்டு வருகின்றனர்? கேவலம் இது, மிகக் கேவலம். அந்தக் கொடியவர்களின் நிழல் பட்டாலே இழிவாயிற்றே! அவர்களுக்கா நமது தீவிலே இடம்? அந்த வெறியர்கள் இங்கு இருக்கப் போகிறார்கள் என்றால், அதே இடத்தில் நாம் இருப்பதா? கேவலம்! மிகக் கேவலம் அது. அப்பா! நாம் இந்தத் தீவைவிட்டு வேறிடம் போய்விடலாம். அந்தக் கொடியவர்களைக் காண்பது கூடப் பெரும் பாவம்! இங்கு இருக்கலாகாது" என்று பெண் வற்புறுத்துகிறாள். அவள் உள்ளத்தில் வெறுப்புணர்ச்சி அவ்வளவு கப்பிக் கொண்டிருக்கிறது. முதியவர் புன்னகை செய்கிறார். அடே அப்பா! எவ்வளவு கொதிப்புடன் பேசுகிறாள் மகள் என்பதை எண்ணி.

"மகளே! மற்றவர்கள் தீவை விட்டுச் சென்றுவிட்டாலும், நாம் செல்வதற்கு இல்லை. மிராசுதாரர், நாம் இங்கேயே இருந்தாக வேண்டும்; கவனிப்பு இல்லாவிட்டால் பண்ணை பாழாகிவிடும் என்கிறார்; மேலும் இங்கு சிறை வைக்கப்பட இருப்பவர்களுக்கு, நாம் தான் பால் தரவேண்டி இருக்கிறது; வேறு வழியில்லை..." என்கிறார்.