பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

13

"பால் தருவதா! அந்தப் பாவிகளுக்கா! எந்தப் பாதகர்களை ஒழித்திடும் புனிதப் போரிலே அண்ணன் ஈடுபட்டிருக்கிறாரோ, அந்தப் பாதகர்களுக்கு நாம் பால் தருவதா? அக்ரமம்! அநியாயம்! இழிசெயல்! நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். அந்தப் பாவிகளை வெட்டி வெட்டிப் போட வேண்டும், கழுகுக்கும் நரிகளுக்கும்; அவர்களுக்கு நமது தீவிலே இடம்! நமது பண்ணையிலிருந்து பால்! இது என்ன அநியாயமப்பா!" - என்றெல்லாம் அவள் எண்ணிக் கொதிப்படைகிறாள். முதியவர் புன்னகை புரிகிறார்.

"அதனால் என்னம்மா! அவர்களும் மனிதர்கள்தானே! ஜெர்மானியர்களாகப் பிறந்ததனாலேயே அவர்கள் மனித குலம் அல்ல என்று கூறிவிட முடியுமா! போர் மூண்டுவிட்டது, நம் நாட்டுக்கும் ஜெர்மனிக்கும். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். அதனால் ஜெர்மானியர் மனிதர்களே அல்ல என்று கூறிவிட முடியுமா!" - என்று கனிவாகப் பேசுகிறார் முதியவர்; கன்னி கடுங்கோபம் கொள்கிறாள்.

போரின் போது, இரு தரப்பினருந்தான் அழிவு வேலையில் ஈடுபடுகின்றனர். எந்தச் சமயத்தில், எந்த இடத்தில் எவருடயை கரம் ஓங்கி இருக்கிறதோ அவர்கள் அதிக அளவுக்கு வெட்டி வீழ்த்துவார்கள்! இரு தரப்பினரும் ஒரே விதமான வேலையில் - கொல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதிலே ஒரு தரப்பினர் மட்டுமே காட்டு மிராண்டிகள் - கொலை பாதகர்கள் - இரத்த வெறி பிடித்தலைவோர் - என்று கூறிவிட முடியுமா? போர், காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டு விடுகிறது. ஒரு தரப்பினர் குண்டுகளால் தாக்குகின்றனர்; மற்றொரு தரப்பினர் மலர்கொண்டு அர்ச்சிக்கின்றனர் என்பதா போர்! கொலை நடக்கிறது, பெரிய அளவில் - சட்டத்தின் அனுமதியுடன் - சமூகத்தின் ஒப்புதலுடன்! இதிலே அதிகமான அளவு அழிவைச் செய்பவன் வெற்றி வீரனாகிறான். அவனுடைய கரம் இரத்தக் கறை படிந்தது. ஆனால் அது நாட்டைக் காத்த கரம் - வெற்றி ஈட்டிய கரம் - புகழ் தேடித் தந்த கரம் என்பதால் பாராட்டப்படுகிறது.