பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இரும்பு

முதியவர் இதுபோன்ற கருத்தினைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்; அவருடைய உள்ளம் ஒரேயடியாக வெறுப்பு நிரம்பியதாக இல்லை; நியாய உணர்ச்சியும் சிறிதளவு உலவிட இருந்தது.

"இப்படி ஒரு மனமா! ஜெர்மானியர் வந்து தங்கினால் என்ன!! அவர்களுக்குப் பருகிடப் பால் தந்தால் என்ன என்று பேசுவதா? நமது நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்கக் கிளம்பியுள்ள கொடியவர்கள் இந்த ஜெர்மானியர். இவர்களுக்குப் பருகப் பால்! நாம் கொடுப்பதா! என்ன நியாயம் இது! அப்பா ஏன் இப்படிக் கெட்டுக் கிடக்கிறார் - பால் தருவதாமே பகைவர்களுக்கு!! கொடுத்தால் என்னம்மா என்று வாதாடுகிறார்! அவர்களும் மனிதர்தான் என்று நியாயம் பேசுகிறார்! அவர்கள் மனிதர்களா!! பதைக்கப் பதைக்கக் கொன்றார்கள் நம்மவர்களை! பச்சிளங் குழந்தைகளைக் கூடக் கொன்றனர் அக் கொடியவர்கள்! அவர்களும் மனிதர்கள்தான் என்கிறார் அப்பா! ஏன் இவருக்கு இப்படிப் புத்தி கெட்டுப் போய்விட்டது. அங்கே அண்ணன் துரத்துகிறான் ஜெர்மன் கொடியவர்களை - இங்கே அப்பா பால் தரச் சொல்கிறார். அண்ணன் என்ன எண்ணிக்கொள்வார், இதனை அறிந்திடின்? செச்சே! அப்பா சுத்த மோசம்!"

ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்க, சிறைக்கூடம் கட்டப்படுகிறது. கைதிகள் தப்பித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, அங்கு இரும்பு முள்வேலி போடப்படுகிறது. மிருகங்களை அடைத்து வைப்பது போல ஜெர்மன் கைதிகளை அடைத்து வைக்கிறார்கள். வெளியே பிரிட்டிஷ் போர் வீரர்கள் காவல் புரிகின்றனர், தப்பியோட முயற்சித்தால் சுட்டுத்தள்ள.

கைதிகளான எல்லா ஜெர்மானியருமே, போர் வீரர்கள் அல்ல; பலர் தொழிலில், வாணிபத்தில், பல்வேறு அலுவலகங்களில் ஈடுபட்டிருந்தவர்கள்; சிலர் செல்வம் படைத்தவர்கள்கூட!