பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

15

எல்லாம் ஜெர்மானியர்தானே! வெறியர்கள் - கொடியவர்கள்தானே! இவர்களை இப்படித்தான் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மோனாவுக்கு. முதியவருக்கோ ஒரு பச்சாதாப உணர்ச்சி. ஜெர்மானியர்கள் தமக்கு அளிக்கப்படும் உணவு மோசமாக இருப்பதாகக் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார். இதுகளுக்கு அப்படிப்பட்ட உணவுதான் தரவேண்டும் என்கிறாள் மோனா, அவள் இதயத்தில் வெறுப்புணர்ச்சி நிரம்பி இருப்பதால். 'வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள்; அது போதாதா; மேலும் வாட்ட வேண்டுமா அவர்களை' என்று முணுமுணுக்கிறார் முதியவர். கொடியவர்களுக்காகப் பரிவு காட்டுவது மோனாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. "நம்முடைய மக்கள் களத்திலே பூப்பந்தாட்டமா ஆடிக் கொண்டிருக்கிறார்கள்! விருந்தும் இசையும் நடன விழாவுமா நடக்கிறது அவர்களுக்கு. என்னென்ன இன்னலோ, ஆபத்தோ! நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ? அதைப்பற்றி நினைத்துக் கொண்டால் நெஞ்சிலே நெருப்பு விழுவது போலிருக்கிறது. இவர் என்னடா என்றால், இந்தக் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் இடம் மோசம்! போடப்படும் சாப்பாடு மட்டம் என்று உருகுகிறார். அந்தப் பாவிகளுக்காக! அந்தப் பாதகர்களுக்காக!" என்று மோனா கூறுகிறாள். முதியவர், 'கல்மனம் மகளே! உனக்குக் கல்மனம்!' - என்று மெள்ளக் கூறுகிறார்.

மேலும் மேலும் ஜெர்மானியர் கொண்டுவரப் படுகின்றனர். இரும்பு முள்வேலி போட்ட சிறைக்குள்ளே தள்ளப்படுகிறார்கள்.

மோனாவின் மனம் இளகவில்லை; படட்டும், படட்டும்! அனுபவிக்கட்டும்! என்றே கூறுகிறாள். என்ன செய்தார்கள் அவர்கள்? என்ன செய்ய வேண்டும்? அவர்கள் ஜெர்மானியர்கள்; அது போதாதா அவர்களிடம் வெறுப்புக் கொள்ள?

அத்தனை வெறுப்புக் கொண்டிருக்கும் மோனா! அந்த ஜெர்மானியர்களை நாளைக்கு இரண்டு வேளையாவது பார்த்துத் தொலைக்க வேண்டி வருகிறது. பால் வாங்கிக் கொண்டு