பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இரும்பு

"நான் சமாதானம் மலர்வதை விரும்பவில்லை. போர் வேண்டும்! மேலும் மேலும் போர் வேண்டும்! அந்தக் கொடிய மிருகங்கள் உலகிலிருந்தே விரட்டி அடிக்கப்படும் வரையில் போர் வேண்டும்."

முதியவர் தன் மகளின் நிலையை உணருகிறார். ஆனால் அவள் போக்கை மாற்ற முடியாது என்று கண்டுகொள்கிறார் போலும்! திருத்த முயற்சிக்கவில்லை; வாதிடக்கூட இல்லை.

நமது மகள் மட்டுமா, நாட்டிலே அனைவருமே இப்போது இவ்விதமான போக்குடன் உள்ளனர்; இது திருத்தப்படக் கூடியதாகத் தெரியவில்லை; ஓங்கி வளர்ந்து வளர்ந்து போருருக் கொண்டு, பெரியதோர் அழிவை மூட்டிவிட்டுப் பிறகே இந்த வெறி உணர்ச்சி மடியும்; இடையிலே இந்த உணர்ச்சியின் வேகத்தைக் குறைத்திடுவதுகூட முடியாத காரியம் என்று முதியவர் எண்ணிக் கொண்டார் போலும்.

ராபி - மோனாவின் அண்ணன் கடிதம் எழுதுகிறான், களத்தின் நிலை பற்றி; உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் பெரியதோர் தாக்குதலை நடத்தப் போகிறோம்; முன்னணிப் படையினில் நான் இருக்கப் போகிறேன்; இந்தத் தாக்குதல் பகைவர்களை அழித்திடும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறான். கேட்கக் கேட்க இனிப்பாக இருக்கிறது மோனாவுக்கு.

"அப்பா! மோனாவிடம் சொல்லு, அவள் எனக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை, அதிகாரிகள் சிலரிடம் படித்துக் காட்டினேன். அவர்கள் மிகவும் மெச்சுகிறார்கள்; உன் தங்கை போன்ற உணர்ச்சியும் எழுச்சியும் கொண்ட வீரர் ஆயிரவர் இருந்தால் போதும்; இந்தப் போர் ஒரு திங்களில் வெற்றி தந்திடும் என்று கூறிப் பாராட்டுகின்றனர்." ராபியின் கடிதத்திலிருந்து இந்தப் பகுதியைப் படித்திட கேட்டபோது மோனாவுக்குப் புல்லரித்தது; பூரித்துப் போனாள்.

பிரிட்டிஷ் படைகள் பலமாகத் தாக்குகின்றன.

ஜெர்மன் படைகள் விரண்டோடுகின்றன.