பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

19

ஜெர்மன் படைக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்படுகிறது.

இதழ்கள் தந்திடும் இந்தச் செய்தித் தலைப்புகள் மோனாவுக்குச் செந்தேனாக இனிக்கிறது.

ராபி ஏன் இந்த வெற்றிச் செய்திகளைப் பற்றித் தெரிவிக்கவில்லை; கடிதம் காணோமே என்று எண்ணிக் கவலை கொள்கிறாள்.

ஒருநாள் அஞ்சல் வருகிறது; அதை எடுத்துக் கொண்டு வருபவன் முகத்தில் ஈயாடவில்லை; குனிந்த தலையுடன் வருகிறான்; கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான்; நீளமான உறை; சர்க்கார் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. முதியவர் பிரித்துப் படிக்கிறார்; 'சர்க்கார் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளும் சேதி என்னவென்றால், படை வீரன் ராபி களத்தில்...' முழுவதும் படிப்பானேன்? விஷயம் புரிந்து விட்டது; ராபி இறந்துவிட்டான். வீரமரணம்; நாட்டைக் காத்திடும் முயற்சியில் உயிரை இழந்தான் - என்றெல்லாம் பாராட்டு இணைக்கப்பட்டிருக்கிறது கடிதத்தில்; ஆனால் தந்தையின் தத்தளிப்பை, வீர மரணம் என்ற பாராட்டுதல் குறைத்திட முடியுமா...

"மகளே! படி அம்மா! பாரம்மா!"

மோனா படிக்கிறாள்! அண்ணன் இறந்துபட்டான்! ராபி மறைந்துவிட்டான்! ராபியைக் கொன்றுவிட்டார்கள் - கொடியவர்கள் - ஜெர்மானியர்! அந்தக் கொடிய ஜெர்மானிய இனத்தவரிலே ஒரு பிரிவினர் கைதிகள் என்ற பெயருடன் இங்கே உள்ளனர்! என் அண்ணனைக் கொன்றுவிட்ட கொடியவர்கள், ஜெர்மானியர்! அவர்களிலே ஒரு பகுதியினர் இங்கே! அவர்கள் பருகிடப் பால் தமது பண்ணையிலிருந்து! என் அண்ணனின் குருதியைக் குடித்துவிட்டார்கள், அந்தக் கொடியவர்கள்; அந்த இனத்தார் இங்கு பருகிட நாங்கள் பால் அளிக்கிறோம்!