பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இரும்பு

இதுபோல என்னென்ன எண்ணிக் கொண்டிருந்திருப்பாள், பாவம்! ஏற்கனவே மூண்டு கிடந்த கொதிப்பு மேலும் எந்த அளவு கிளம்பிவிட்டிருக்கும்!

பிதாவிடம் பிரார்த்திக்கச் சொன்னாரே, அப்பா! இப்பொழுது என்ன சொல்லுவார்!

"அப்பா! பால் கொடுத்து வருகிறோமே பாதகர்களுக்கு அந்த ஜெர்மன் கொடியவர்கள் உன் மகனுடைய இரத்தத்தை - என் அண்ணன் உயிரைக் குடித்துவிட்டார்களப்பா! அண்ணனைக் கொன்றுவிட்டார்களப்பா! அந்த கொடிய இனத்தவர், இங்கேயும் உள்ளனர்; நமது பண்ணையில் பால் வாங்கிப் பருகிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பச்சாதாபம் காட்டச் சொன்னீர்களே! அவர்கள் ஜெர்மானியராக இருந்தால் என்ன, அவர்களும் மனிதர்கள் என்று வாதாடினீர்களே! அந்த மிருகங்கள் உன் மகனை - என் அண்ணனை - நாட்டுப் பற்று மிக்கவனை, நியாயத்தை நிலைநாட்டப் போரிட்ட மாவீரனைக் கொன்றுவிட்டனவே அப்பா! இப்போது என்ன சொல்கிறீர்? பிரார்த்தனை செய்ய வேண்டுமா, பிதாவிடம் சமாதானம் வழங்கும்படி? சமாதானமா அப்பா வேண்டும்!! அண்ணன் உயிரைக் குடித்த கொடியவர்கள் கொட்டமடித்துக் கொண்டிருப்பது; நாம் பிதாவிடம் சமாதானம் வேண்டி பூஜித்துக் கிடப்பதா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள்!! என்ன செய்யலாம் சொல்லுங்கள்" என்றெல்லாம் கேட்டிட அந்தக் கன்னி துடித்திருப்பாள்.

முதியவரின் நிலை? மகன் இறந்துபட்டான் என்ற செய்தியை அறிந்ததும், அவருடைய மனதிலே சிறிதளவு தலை தூக்கியபடி இருந்ததே மனிதத் தன்மைக்கே உரிய பண்பு, அன்பு காட்டுதல், பகைவருக்கும் இரங்குதல், அது மடிந்து விட்டது; அடியோடு மடிந்தே போய்விட்டது. இதயத்தில் ஒரு பயங்கரமான சம்மட்டி அடி விழுகிறது; முதியவர் கீழே சாய்கிறார், நினைவு இழந்து. மருத்துவர் வருகிறார்; இதயத்திலே அடி! என்றாலும் இப்போதைக்கு ஆபத்து இல்லை. படுத்துறங்கட்டும்; முழு ஓய்வு வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.