பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

21

முதியவர் படுத்துக் கிடக்கிறார்; மோனாவின் உள்ளக் கொதிப்பு மேலும் ஓங்கி வளருகிறது.

ஜெர்மானியர்களை ஆண்டவன் அழித்தொழிக்க வேண்டும்.

எல்லா ஜெர்மானியரையும் ஜெர்மன் அதிபர்கள் - ஜெர்மன் கெய்சர் என்போரை மட்டுமல்ல, எல்லா ஜெர்மானியரையும் அழித்திடவேண்டும் - ஆண் - பெண் - குழந்தை குட்டி அவ்வளவு பேரும் - ஒருவர் பாக்கியில்லாமல் ஒழிந்து போக வேண்டும். ஆண்டவன் ஜெர்மன் மக்கள் அனைவரையும் அழித்தாக வேண்டும்; இல்லையென்றால் அவர் உண்மையான ஆண்டவன் அல்ல!

மோனாவின் பிரார்த்தனை இதுபோல! வேதனை நிரம்பிய உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் பிரார்த்தனை!

முதியவர் நடத்தச் சொன்ன பிரார்த்தனை, பகைவனுக்கும் அருள்பாலிக்கும்படி. மோனா அதனை மறுத்தாள். கல் மனம் அம்மா உனக்கு என்று முதியவர் கூறினார். இப்போது?

ஆண்டவனே எழுந்தருள்வீர்! உமது பகைவர்கள் சிதறி ஓடிடட்டும். கடவுள் நெறி மறந்தோர் கொட்டமடித்திட விடக்கூடாது. தேவதேவா! தழலென எரியும் கரித்துண்டுகள் அவர்கள் மீது பொழியட்டும்; நெருப்பிலே தள்ளிடுவீர் அந்த நாசகாலர்களை! நரகப் படுகுழியில் தள்ளிடுவீர்! மீண்டும் அவர்கள் தலைதூக்கிடாதபடி படுகுழியில் அந்தப் பாவிகளைத் தள்ளிடுவீர்!

இது முதியவரின் பிரார்த்தனை. வேதப் புத்தகத்தில், பாவிகளை ஆண்டவன் அழித்தொழித்த படலத்தில் உள்ள பிரார்த்தனையைப் படிக்கிறார். பரிவு, பச்சாதாபம், பகைவனுக்கு இரங்கல் என்பதை இப்போது அவருடைய உள்ளத்தில் இடம் பெற மறுத்துவிடுகிறது. மகனைக் கொன்ற மாபாவிகள் என்று எண்ணும்போதே, ஜெர்மானியர் பூண்டோடு அழிந்துபட வேண்டும் என்ற கொதிப்பு எழுகிறது. மோனா