பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இரும்பு

சொன்னதுதான் சரி; அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்கிறார் முதியவர். ஆண்டவனை அழைக்கிறார் சமாதானம் வழங்கச் சொல்லி அல்ல; ஜெர்மானியர்களை அடியோடு அழித்தொழிக்கும்படி.

ஜெர்மன் கைதிகள் அடைபட்டுக் கிடந்ததால், மிருக உணர்ச்சி மேலிட்ட நிலையினராகின்றனர்.

அடிக்கடி சச்சரவு, குழப்பம், அடிதடி, அமளி.

கலகம் செய்த கைதிகள் சிலர் காவற்காரர்களால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர்.

நிலைமையை அறிந்து போக வந்திருந்த மேலதிகாரி, 'இவர்களை நாய்களை அடைத்து வைப்பதுபோல அடைத்து வைத்தால், நாய்க் குணம் ஏற்பட்டுவிடத்தானே செய்யும். ஒரு வேலையுமின்றி அடைபட்டுக் கிடப்பதால் வெறிகொண்டு விடுகின்றனர். ஏதாவது வேலை கொடுக்க வேண்டும்" என்று கூறுகிறார்.

இரும்பு முள்வேலி போடப்பட்ட இடங்களிலேயே, தொழில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன, கைதிகள் வேலை செய்ய.

மிருகங்களை மனிதர்களாக்க முயற்சிக்கிறார்கள் என்று கேலி பேசினாள் மோனா, இந்தப் புதிய திட்டத்தைப் பார்த்து.

வழக்கப்படி பால் வாங்கிக் கொண்டு போக வரும் இருமல்காரனுக்குப் பதிலாக வேறோர் ஜெர்மானியன் வந்தான், ஓர்நாள்.

மோனா அதனைக் கவனிக்கக்கூட இல்லை. பால் பாத்திரத்தை அவன் பக்கம் வைத்தாள். 'இது நான் எடுத்துப் போக வேண்டிய பாத்திரமா?' என்று புதியவன் கேட்டபோது தான் திரும்பிப் பார்த்தாள். 'அவன் மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டான்; அவனுக்குப் பதிலாக நான் வந்திருக்கிறேன்' என்றான் புதியவன், இளைஞன்; சாந்தமான முகத்தினன்.