பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

குரலிலே கடுமை இல்லை, நடையிலே ஆணவம் காணோம். முகத்திலே வெறித்தனம் காணோம்; யார் இவன் ஜெர்மானியனாக இருக்க முடியுமா என்ற ஐயம் மோனாவுக்கு.

உன் பெயர்?

ஆஸ்க்கார்...

ஆஸ்க்கார்...?

ஆஸ்க்கார் ஹெயின்.

மூன்றாம் நம்பர் சிறைக்கூடத்திலா இருக்கிறாய்?

ஆமாம்.

மோனா, எதுவும் பேசாமல் அவனை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, 'அதுதான் நீ எடுத்துச் செல்ல வேண்டிய பாத்திரம்' என்று கூறுகிறாள்.

'நன்றி!' என்று கூறுகிறான் ஜெர்மானியன். பதிலுக்கு நன்றி கூற நினைத்தாள் மோனா. முடியவில்லை. அவன் போகிறான்; அவள் பார்க்கிறாள்; அவன் போன பக்கமே பார்த்துக் கொண்டிருக்கிறாள்; வாசற்படியில் நின்று கொண்டு பார்க்கிறாள்; பிறகு பலகணி வழியாகவும் பார்க்கிறாள்.

அன்று முழுவதும் மோனா சிடுசிடுவென்று இருக்கிறாள். ஏதோ குமுறல், மனதில்.

வழக்கப்படி பிரார்த்தனைக்கு அழைக்கிறார் முதியவர்!

"இன்றிரவு வேண்டாமப்பா, தலைவலி" என்று கூறி விடுகிறாள் மோனா. தலைவலியா!!

அன்றிருந்த ஒரு மனப்போராட்டம், மோனா தன் உள்ளத்திலே இடம் பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டும் முயற்சியில் மும்முரமாகிறாள்; முடியவில்லை. முதியவருடன் அதிகநேரம் அளவளாவுகிறாள், அவர் புதிதாகப் பெற்றுள்ள வெறுப்புணர்ச்சியைத் தனக்கு ஊட்டுவார், உள்ளத்தில் இடம் பெறப் பார்க்கும் புதிய உணர்ச்சியை விரட்டிடுவார் என்ற நம்பிக்கையுடன்.