பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இரும்பு

ஜெர்மானியர்களை அழித்தொழிக்கச் சொல்லி முதியவர் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார். மோனா? பிரார்த்தனையில் கலந்து கொள்கிறாள்; ஆனால் வேறு ஏதோ ஒரு உணர்ச்சி அவளை வேறு எங்கோ அழைக்கிறது; இழுத்துச் செல்லப் பார்க்கிறது. அந்த ஆஸ்கார் கூடவா, ஜெர்மானியன். அத்தனைப் பணிவாக இருக்கிறான்; கனிவாகப் பேசுகிறான்; முகத்தைப் பார்த்தால் கொடியவனாகத் தெரியவில்லை. ஜெர்மானியனா இவன்; ஆஸ்க்கார் போன்றவர்கள்கூட இருக்கிறார்களா ஜெர்மன் இனத்தில் - என்றெல்லாம் எண்ணுகிறாள் மோனா.

'நரகப் படுகுழியில், பகைவர்களைத் தள்ளு' என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறார் முதியவர்; மோனாவுக்குப் பிடித்தமான பிரார்த்தனை அது; முன்பு! இப்போது? அந்தப் பிரார்த்தனை அவளுக்கு என்னமோ போல இருக்கிறது. ஆண்டவனையா இவ்வளவு கொடுமைகளைச் செய்திடச் சொல்லிக் கேட்பது! ஆண்டவன் என்றால் தயாபரன் அல்லவா! அவரிடம் இப்படியா ஒரு பிரார்த்தனை செய்வது என்று கூட எண்ணி சிறிதளவு அருவருப்பு அடைகிறாள். கன்னியின் இதயத்திலே புதிய கருத்து கருவளவாகிறது!

மோனா, சபலத்துக்கு இடமளிக்கக்கூடாது என்ற உறுதியுடன் போரிடுகிறாள். ஜெர்மன் கைதிகளைக் கண்டால் கடுகடுப்பைக் காட்டுவது; அவர்களிடம் ஒரு பேச்சும் பேசாதிருப்பது; அவர்களிடம் தனக்கு உள்ள வெறுப்பை வெளிப்படையாகத் தெரியச் செய்வது என்ற முறையில் நடந்து கொள்கிறாள். ஆனால் அந்த ஆஸ்க்கார்!

லட்விக் இறந்துவிட்டான்?

யாரவன் லட்விக்?

முன்பெல்லாம் வருவானே, இருமிக்கொண்டு... அவன் தான் லட்விக். வயது 22! பரிதாபம்! செத்துவிட்டான்! கடிதம் எழுதவேண்டும் அவன் தாயாருக்கு.

மோனாவுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்கிறது; கண்களில் நீர் துளிர்க்கிறது; ஆனால் சமாளித்துக் கொண்டு கூறுகிறாள்.