பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இரும்பு

கிறாள்! எப்படி முடிந்தது! பகைவனிடம் பச்சாதாபம் காட்டுவதா! என்று கேட்ட மோனா செய்கிற காரியமா இது! எப்படி ஏற்பட்டது இந்த மாறுதல்? யார் புகுத்தியது அந்தப் புதிய உணர்ச்சியை? ஆஸ்க்கார்! அவன் பார்வை, அவளுடைய உள்ளத்தில் ஒரு புதிய உணர்வை எழுப்பிவிட்டது. எவ்வளவோ முயன்று பார்த்தும் அவளால் அந்தப் புதிய உணர்வை உதறித் தள்ளிவிட முடியவில்லை. இடம் பிடித்துக் கொண்டது!

ராபியின் வீர தீரத்தை மெச்சிப் பிரிட்டிஷ் துரைத்தனம் அனுப்பி வைத்த வீரப்பதக்கத்தை மோனா அணிந்து கொள்கிறாள் எழுச்சியுடன்.

வீரப்பதக்கம்! அண்ணன் பெற்றது! கொடியவர்களாம் ஜெர்மானியரைக் கொன்று குவித்ததற்காக! அந்த ஜெர்மானியரில் ஒருவன் இந்த ஆஸ்க்கார். அவன் இந்த வீரப் பதக்கம் பற்றிய விவரம் கேட்கிறான். மோனா கூறுகிறாள். நமது இனத்தவர்களைச் சாகடித்ததை வீரம் என்று மெச்சித் தரப்பட்டது இந்தப் பதக்கம் என்பதனை அறிந்ததும் ஆஸ்க்காரின் முகம் கடுகடுப்பை அல்லவா காட்ட வேண்டும்! இல்லை! அவன், ராபியைப் புகழ்ந்து பேசுகிறான், பாராட்டுதலுக்குரிய வீரன் என்று!!

என்ன விந்தை இது! கப்பிக் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி எங்கே போய்விட்டது.

தன் அண்ணனைக் கொன்ற பாவிகளாம் ஜெர்மானிய இனத்தவரில் ஒருவனாம் ஆஸ்க்காரிடம், மோனா வெறுப்பை காட்ட முடியவில்லை, எவ்வளவோ முயன்றும்!

தன் இனத்தவரைச் சுட்டுத் தள்ளியதற்காக வீரப்பதக்கம் பெற்ற ராபியைப் பாராட்டிப் பேசுகிறான் ஜெர்மானியன் ஆஸ்க்கார்!

கப்பிக் கொண்டிருக்கும் காரிருளைக் கிழித்தெறிந்து கொண்டு விண்மீன் கண் சிமிட்டுகிறதே!!

மோனாவிடம் ஏதோ ஓர் மாறுதல் தோன்றி விட்டிருக்கிறது என்பது முதியவருக்குத் தெரிகிறது. விவரம் புரியவில்லை.