பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இரும்பு

வெறுப்புணர்ச்சிதான். முதியவரே ஒவ்வொரு நாளும் 'பிதா'வை வேண்டிக் கொண்டிருக்கிறார், கொடிய ஜெர்மானியரைக் கொன்றொழி என்று.

ராபி களத்திலே கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது பிரிட்டிஷ் படை வரிசையினால் தாக்கப்பட்டு, குற்றுயிராகி ஒரு ஜெர்மன் போர் வீரன், ராபி இருந்த 'குழிக்கு' அருகே துடித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைக் கண்ட ராபி உருகிப் போனான். இவனை இப்படி இம்சைப்படவிடக்கூடாது என்ற இரக்க உணர்ச்சி எழுந்தது. பாய்ந்தோடி சென்று துடித்துக் கிடந்த ஜெர்மானியனை தன் வரிசையினர் பதுங்கிக் கிடந்த 'குழி'க்கு இழுத்துக் கொண்டு வந்தான். ஆனால் அந்த முயற்சியில் ஜெர்மன் படை வரிசையினரின் குண்டுகள் அவனைத் துளைத்தன; துடித்துக் கிடந்தான்.

ஒரே குழியில், ஒரு ஜெர்மன் போர் வீரன், பிரிட்டிஷ் படையினரின் குண்டடிபட்டு; ஒரு பிரிட்டிஷ் போர்வீரன் ஜெர்மன் குண்டடிபட்டு! ஜெர்மானியன் துடிப்பது கண்டு மனம் தாளவில்லை பிரிட்டிஷ் ராபிக்கு! ஜெர்மன் வீரனைக் காத்திடச் சென்றபோது ஜெர்மன் குண்டு தாக்குகிறது பிரிட்டிஷ் ராபியை! குண்டடிபட்ட இருவரும் ஒரே குழியில் கிடக்கிறார்கள்.

பிரிட்டிஷ் படை வேறிடம் செல்கிறது, அடிபட்ட இருவரையும் விட்டுவிட்டு.

ஜெர்மானியன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டான்; பிரிட்டிஷ் ராபியோ மரணத்தின் பிடியில் சிக்கிக் கொண்டான்.

கடைசி நேரம் நெருங்குவது அறிந்த ராபி, தன் கைக்கடியாரத்தைக் கொடுக்கிறான் ஜெர்மானியனிடம். 'நீ உயிர் தப்பி ஊர் திரும்பினால், இதனை என் தங்கையிடம் சேர்த்து விடு' என்று கூறிவிட்டு.

ராபி இறந்துவிடுகிறான்; அந்த ஜெர்மானியன் பிழைத்துக் கொள்கிறான்.