பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

33

குழந்தைகளாக இருந்தால் என்ன!" - இவ்விதம் பேசிப் பார்க்கிறாள் மோனா; முதியவரின் கோபம் அதிகமாகிறதே தவிர பழிவாங்கும் உணர்ச்சி மாறுவதாக இல்லை.

அதே சம்பவம் பற்றிய சேதி அறிந்த ஆஸ்க்கார், பச்சாதாபம் காட்டுகிறான். 'என் நாட்டவர் இந்தக் கொடுமை செய்ததைக் கேள்விப்பட்டு நான் வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன்' என்கிறான். மோனாவின் மனம் சாந்தி அடையவில்லை. மிகக் கடுமையான முறையில் பேசுகிறாள்.

"நீ வெட்கப்பட்டு என்ன பயன்? வேதனைப்பட்டு என்ன பயன்? எங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட்டது போன்ற கொடுமை, உங்கள் நாட்டுக் குழந்தைகளுக்கு நேரிட வேண்டும். அப்போது புரியும்" என்று மோனா கூறிவிட்டுப் போகிறாள். ஆஸ்க்கார் திகைத்துப் போகிறான்.

சில நாட்கள் வரையில் மோனா ஆஸ்க்காரைப் பார்க்க முயலவில்லை. ஜெர்மானியரிடம் வெறுப்புணர்ச்சி கொள்ள முயற்சிக்கிறாள்.

கிருஸ்மஸ் பண்டிகை! கைதிகள் முகாமிலேயும், இசை விருந்து விழாக் கோலம்.

அன்றிரவு ஆஸ்க்கார் வருகிறான், வீடு நோக்கி.

வீட்டுக்குள்ளேயே வந்தமருகிறான்; காரணம், தனக்கு ஏற்பட்ட வேதனையை மோனாவிடம் கூறி ஆறுதல் பெற. அவனுடைய வீட்டின் மீது பிரிட்டிஷ் குண்டு வீசப்பட்டதில், அவனுடைய தங்கை பத்து வயதுச் சிறுமி இறந்து விட்டிருக்கும் செய்தி அன்று அவனுக்குக் கிடைத்திருக்கிறது; வேதனை தாளமாட்டாமல் வந்தேன்; ஆறுதல் அளித்திட வேறு யாரும் இல்லை. அதனால் இங்கு வந்தேன். தங்கச் சிலை என் தங்கை! பத்தே வயது! சின்னஞ் சிறு சிட்டு! என் உயிர்! எங்கள் குடும்பத்துக் கொடிமலர் - என்றெல்லாம் கூறிக் குமுறிக் குமுறி அழுகிறான் ஆஸ்க்கார்.

பூ-162-இ-2