பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இரும்பு

வேதனை நிரம்பிய இந்தச் செய்தி பற்றி அவனுக்குக் கிடைத்த கடிதத்தைப் படித்துவிட்டு மோனா கலங்குகிறாள். அருகே செல்கிறாள் ஆறுதல் கூற! அணைத்துக் கொள்கிறாள்! அவன் மெய்மறந்த நிலை அடைகிறான். எவருமே பிரிக்க முடியாததோர் அணைப்பு! காலமெல்லாம் இதற்காகத்தானே காத்துக் கிடந்தோம் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த அணைப்பில் பொருள் அதுவாகத்தான் இருந்தது.


ஜெர்மானியரும் பிரிட்டிஷாரும் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக்கொள்கின்றனர். இங்கு ஓர் ஜெர்மன் வாலிபனைத் தழுவிக் கொள்கிறாள் ஓர் பிரிட்டிஷ் கன்னி; காமவெறியால் அல்ல, கயமைக் குணத்தால் அல்ல, எந்தத் தடையும் தகர்த்தெறியும் காதலின் தூய்மை தந்திடும் வலிமை காரணமாக. இரண்டு உள்ளங்கள் கலந்துவிட்டன; இன பேதம், மூண்டுள்ள பகை, நடைபெறும் போர், கப்பிக் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சி எதுவும் அவர்களைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் ஜெர்மனி-பிரிட்டன் என்ற நாட்டுக் கட்டுகளை மீறியதோர் காதலால் கட்டுண்டு கிடந்தனர். ஒரு நிமிடமா, ஓராயிரம் ஆண்டுகளா, எவ்வளவு நேரமாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி நின்றனர் என்பது இருவருக்கும் புரியாத நிலை. நாடு இனம் எனும் உணர்ச்சிகளைக் கடந்த நிலை மட்டுமல்ல, காலத்தையும் கடந்ததோர் நிலை! காதல் உணர்ச்சி அவர்களைப் பிணைத்துவிட்டது.

கீழே ஏதோ பேச்சுக் குரல் கேட்ட முதியவர், தள்ளாடி தள்ளாடி வந்து பார்க்கிறார், ஜெர்மானியனுடன் தன் மகள் குலவுவதை! திகைத்தார்! துடித்தார்! பதறினார்! கதறினார்! "அடி கள்ளி! உன் அண்ணனைக் கொன்றவர் ஜெர்மானியர்; நீ அணைத்துக் கொண்டிருப்பது ஒரு ஜெர்மானியனை! விபச்சாரி! குடும்பத்துக்கும், நமது இனத்துக்கும் இழிவு தேடிவிட்டாயே! இந்தக் கள்ளக் காதல் காரணமாகத்தான் உன் போக்கு மாறிவிட்டிருந்ததா! பாவி! இந்தப் பாவம் உன்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுச் சித்திரவதை செய்-