பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

37

எந்த நாட்டிலும் இவ்விதமான உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம்.

பெர்ல் பக் எனும் உலகப் புகழ் பெற்ற ஆசிரியர், தமது படைப்புகளில், இது போன்ற உணர்ச்சிக் குழப்பங்களை விளக்கிக் காட்டியுள்ளார்.

மோனாவுக்கு ஏற்பட்ட பிரச்சினை தன் மனதிலே இடம் பெற்ற ஜெர்மானியனை மணம் செய்து கொள்வது தவறல்ல என்பதை நாட்டவர் ஒப்புக் கொள்ளச் செய்திட வேண்டும் என்பதாகும்.

மற்றோர் 'முனை'யைக் காட்டுவது போல, பெர்ல் பக் ஒரு கதையைத் தீட்டி அளித்துள்ளார்.

ஜப்பானியர்களுக்கும் அமெர்க்கர்களுக்கும் போர் நடந்திடும் நேரம். இரண்டாவது உலகப் போர்! இட்லர் மூட்டிவிட்ட போர்!

ஜப்பானியரைக் கண்டதும் சுட்டுத் தள்ள வேண்டும் என்ற உணர்ச்சி அமெரிக்கர்களுக்கு; அது போன்றே ஜப்பானியருக்கும்.

இது 'தேசிய உணர்ச்சி' என்ற மதிப்புப் பெற்றுவிட்டிருந்த நேரம்.

அவனும் மனிதன் தான்! - என்று பேசுவதே தேசத் துரோகம்!

அவன் ஜப்பானியன். ஆகவே கொல்லப்பட வேண்டியவன் என்ற எண்ணம், ஏற்புடையது என்று ஆக்கப்பட்டுவிட்டிருந்த சூழ்நிலை.

அந்நிலையில், ஏதோ விபத்திலே சிக்கி, குற்றுயிராகிக் கிடந்த நிலையில் ஒரு அமெரிக்கன், கடலோரம் கிடத்தப்பட்டிருப்பதை ஒரு ஜப்பானியன் காண்கின்றான்.

அந்த ஜப்பானியன் ஒரு டாக்டர். அமெரிக்கனோ, உயிருக்கு மன்றாடுகிறான்!