பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இரும்பு

டாக்டரின் கடமை என்ன? விபத்திலே சிக்கி உயிர் துடித்துக் கொண்டிருப்பவனைக் காப்பாற்றுவது! இனம், ஜாதி, எனும் எதனையும் கவனிக்கக்கூடாது; நோயாளி - டாக்டர் என்ற தொடர்பு மட்டுமே அதுபோது தெரியவேண்டும்.

வீட்டுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை செய்கிறான். அமெரிக்கன் பிழைத்துக் கொள்கிறான்.

எந்த அமெரிக்கனைக் கொல்வது, 'தேசியக் கடமை' என்று கொள்ளப்பட்டிருக்கிறதோ, அந்த அமெரிக்கனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டுவிட்டான்!

மருத்துவன், தன் கடமையைச் செய்தான்! ஆனால் ஜப்பானியன் என்ற முறையில் செய்ய வேண்டியதை மறந்து!

இது தேசத் துரோகம் என்று கருதப்படுமே. தன் மீது பழி வருமே என்ற பயம் பிடித்துக் கொள்கிறது ஜப்பானிய மருத்துவரை.

அதே ஊரில் இருந்த மேலதிகாரியிடம் சென்று, ஒரு அமெரிக்கன், பிடிபட்டிருக்கிறான் என்றும், தன் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறான் என்றும் கூறுகிறான்.

அந்த அதிகாரி, அமெரிக்கனை இரவு இரண்டு ஆட்களை ஏவிக் கொன்றுவிடச் செய்வதாகக் கூறி அனுப்புகிறான்.

எந்த அமெரிக்கன் உயிரைக் காப்பாற்றினானோ, அதே அமெரிக்கன் உயிரைப் போக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரி கூறுகிறார்; அதற்கு இந்த ஜப்பானிய மருத்துவர் உடந்தை!

இது கொலை பாதகச் செயல்! ஆனால், இரக்கமற்றவனா இந்த ஜப்பானியன் என்றால், இல்லை! உயிர் காத்தவன்! மருத்துவன்! எனினும் இதற்கு இணங்குகிறான். ஏன்? தன்னை ஒரு ஜப்பானியன் என்று மெய்ப்பித்துக் கொள்ள வேண்டுமே, அதனால்.

நாமாக அவனைக் கொல்லக்கூடாது; வேறு யாராவது கொன்றால் கொன்று கொள்ளட்டுமே என்று எண்ணுகிறான்.