பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

39

இதற்கிடையில் அவன் மனதில் எவ்வளவு கடுமையான போராட்டம் நடந்திருக்க வேண்டும்!

ஜப்பானியனாக இருந்தாலும் தன் உயிரைக் காத்தானே இந்த உத்தமன் என்று எண்ணிக்கொண்டு படுத்துக் கிடக்கிறான் அந்த அமெரிக்கன்.

அவன் கொல்லப்படுவதற்கான ஏற்பாட்டினுக்கு அதே ஜப்பானியன் உடந்தையாகிறான் என்பதை அறியவில்லை.

சாகக் கிடந்தவனை நாம்தானே காப்பாற்றினோம்; இப்போது அவனைக் கொல்வதற்கு நாம்தானே காரணமாக இருக்கிறோம்; அவனைச் சாகடிக்கவா பிழைக்க வைத்தோம் என்று எண்ணாமலிருந்திருக்க முடியுமா!!

ஓரிரவு, ஈரிரவு ஆகிறது; அமெரிக்கன் கொல்லப்படவில்லை.

மேலதிகாரி, சொன்னபடி கொலை செய்யும் ஆட்கள் வரவில்லை.

கடைசியில், ஜப்பானியன், அமெரிக்கனை ஒரு படகில் ஏற்றி, தப்பிச் சென்றுவிட ஏற்பாடு செய்துவிடுகிறான். வேறோர் தீவில் அமெரிக்க முகாம் இருக்கிறது; அங்கு போய்விடச் சொல்கிறான்.

மனிதத் தன்மை எனும் உணர்ச்சியின் வெற்றி என்பதா இதனை!

மேலதிகாரியிடம் சென்று, நீங்கள் சொன்னபடி ஆட்களை அனுப்பவில்லை; அவன் தப்பியோடிவிட்டான் என்று கூறுகிறான் ஜப்பானியன்.

மேலதிகாரி பதறவில்லை! அவரும் உள்ளூற அந்தக் 'கொலை' கூடாது என்று எண்ணினார் போலும்! அவர் உள்ளத்திலும் மனிதத் தன்மை மேலோங்கி நின்றிருக்கும் போல் தெரிகிறது.