பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

இரும்பு

'உன் கடமையை நீ செய்தாய்; அமெரிக்கன் பிடிபட்டிருக்கிறான் என்பதை அறிவித்துவிட்டாய்; நான் அனுப்பிய ஆட்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள். சரி! நடந்தது நடந்துவிட்டது! நடந்தது வெளியே தெரிய வேண்டாம்!' என்று மேலதிகாரி கூறிவிடுகிறார்.

ஆக இரு ஜப்பானியர் தம்மிடம் சிக்கிய ஒரு அமெரிக்கனைக் கொன்றுபோட வாய்ப்பு இருந்தும் அவனைச் சாவின் பிடியிலிருந்து மீட்டதுடன், தப்பியோடிடவும் செய்துவிடுகின்றனர்.

இது போன்ற உணர்ச்சிகளின் மோதுதல், பலரால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

வெறுப்புணர்ச்சி இயற்கையானது அல்ல; மூட்டிவிடப்படுவது; மனிதத் தன்மைதான் இயற்கையானது. அதனைப் போர் மாய்த்துவிடுகிறது என்பதை விளக்கிட.

'இரும்பு முள்வேலி'யில் மோனா, மனிதத் தன்மையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறாள், மெத்தப் பாடுபட்டு தன்னை வெறுப்புணர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டவளாக!

அவள் மீது வெறுப்புணர்ச்சிக் கொண்டோ ர் பாய்கின்றனர்.

இது, காவல் புரிய வந்திருந்த ஒரு பிரிட்டிஷ் வீரனுக்குத் துணிவைக் கொடுத்தது; மோனாவைச் சுற்றி வட்டமிடத் தொடங்கினான்.

ஜெர்மானியனுக்கே இணங்கியவள், நாம் தொட்டால் பட்டா போய்விடுவாள் என்று எண்ணிக் கொண்ட அந்த இழிமகன், ஓரிரவு அவள் வீடு சென்று கற்பழிக்கவே முயலுகிறான். அவள் போரிடுகிறாள்; அலறுகிறாள்; எங்கிருந்தோ வந்த ஒருவன், அந்தக் கயவனைத் தாக்கித் துரத்துகிறான். தக்க சமயத்தில் வந்திருந்து தன் கற்பினைக் காத்த வீரன் யார் என்று பார்க்கிறாள் மோனா. ஆஸ்க்கார்! அரும்பு மலர்ந்தே விட்டது!

நிகழ்ச்சிகள் பலப்பல உருண்டோடுகின்றன.