பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

41

கற்பழிக்க வந்த கயவனை ஜெர்மன் கைதிகள் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஒருநாள் மோனாதான் அவனைக் காப்பாற்றுகிறாள்.

தன்னைத் தாக்கியவர்களைத் தூண்டிவிட்டவன் ஆஸ்க்கார் என்று பழி சுமத்துகிறான் காவலாளிகளின் தலைவன். விசாரணை நடத்த மேலதிகாரிகள் வந்தபோது, ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பதை விளக்கிக் காட்டுகிறாள் மோனா. தன் கற்பைக் கெடுக்க காவலர் தலைவன் முயன்றபோது, காப்பாற்றியவன் ஆஸ்க்கார் என்பதைக் கூறுகிறாள். ஆஸ்க்கார் குற்றமற்றவன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இனிக் களைந்தெறிய முடியாத அளவு வளர்ந்துவிட்ட காதல் உணர்ச்சியைத் தாங்கிக் கொண்டு இருவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். களத்திலே போர், ஜெர்மானியருக்கும் பிரிட்டிஷாருக்கும்; இங்கு காதலா! ஒப்புமா உலகு! ஊரோ, மோனா ஜெர்மானியனுக்குக் கள்ளக் காதலி ஆகி விட்டாள் என்று ஏசுகிறது. சபிக்கிறார்கள் - வெறுப்பைக் கக்குகிறார்கள். 'அண்ணன் நாடு காக்க உயிரைக் கொடுத்தான்; இவள் பகைவனுக்குத் தன்னையே கொடுத்து விட்டாள்! பிறந்தாளே இப்படிப்பட்டவள் ஒரு வீரக் குடும்பத்தில்! இவளையும் நாடு தாங்கிக் கொண்டிருக்கிறதே' என்றெல்லாம் ஏசினர். மோனாவுக்கு இந்தத் தூற்றலைப் பற்றியெல்லாம் கவலை எழவில்லை; அவனுடைய கவலை முழுவதும், அவள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டிருந்த காதல் பற்றியே! என்ன முடிவு ஏற்படும் இந்தக் காதலுக்கு! இந்தக் காதல், நாடு இனம் எனும் கட்டுகளை உடைத்துக் கொண்டு பிறந்து விட்டது. போர்ப் புகையால் அரும்பை அழித்துவிட முடியவில்லை. மலரே ஆகிவிட்டது! ஆஸ்க்காருடன் கடிமணம் செய்துகொண்டு வாழ்ந்தாக வேண்டும். இந்தப் போர்ச் சூழ்நிலையில் நடைபெறக்கூடிய காரியமா! அனுமதி கிடைக்குமா? சமுதாயம் ஒப்புக் கொள்ளுமா?

தத்தளிக்கிறாள் மோனா - திகைத்துக் கிடக்கிறான் ஆஸ்க்கார்.