பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இரும்பு

காரிருள் நீங்குமா, பொழுது புலருமா, புது நிலை மலருமா என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கிடக்கின்றனர், காதலால் கட்டுண்ட இருவரும்.

விடிவெள்ளி முளைக்கிறது. பல இடங்களில் செம்மையாக அடிவாங்கி நிலைகுலைந்து போய்விட்டது ஜெர்மன் படைகள். கெய்சரின் வெறிக்கு நாம் பலியாக்கப்பட்டோ ம் என்ற உணர்ச்சி ஜெர்மன் மக்களிடம் பீறிட்டுக் கொண்டு கிளம்பிற்று. நம்மை அழிப்பவர், உண்மையான பகைவர் பிரிட்டனிலே இல்லை; ஜெர்மனியிலே இருக்கிறார். போர் மூட்டிவிட்ட கெய்சரே நம்மை அழித்திடத் துணிந்தவர். நாம் அழிவைத் தடுத்துக் கொள்ள வேண்டுமானால் கெய்சரை விரட்ட வேண்டும்; போர் நிறுத்தத்தைக் கோர வேண்டும் என்று ஜெர்மன் மக்கள் துணிகின்றனர். சமாதானம் ஏற்படுகிறது. பீரங்கிச் சத்தம் நிற்கிறது; இரும்பு முள்வேலிகள் அகற்றப்படுகின்றன. கவலை தோய்ந்த முகங்களிலெல்லாம் ஒரு களிப்பு பூத்திடுகிறது. போர் முடிந்தது! அழிவு இனி இல்லை! பகை இல்லை, புகை எழாது! களம் நின்று குருதி கொட்டினர் எண்ணற்றவர்; ஆயிரமாயிரம் வீரர் பிணமாயினர்; இனி வீரர் வீடு திரும்பலாம்; பெற்றோரை மகிழ்விக்கலாம்; காதற் கிழத்தியுடன் கொஞ்சி மகிழலாம்; குழந்தைகளின் மழலை கேட்டு இன்பம் பெறலாம்; உருண்டோ டி வரும் பீரங்கி வண்டிகள் கிளப்பிடும் சத்தம் வீழ்ந்து வீழ்ந்து வேதனைத் தீயால் துளைக்கப்பட்ட செவிகளில் இனி 'மகனே! அப்பா! அண்ணா! மாமா! தம்பி! அன்பே! கண்ணாளா' - என்ற அன்பு மொழி இசையெனப்புகும்; மகிழ்ச்சி பொங்கும்.

சடலங்கள் கிடக்கும் வெட்டவெளிகள், இரத்தம் தோய்ந்த திடல், அழிக்கப்பட்ட வயல், இடிபாடாகிவிட்ட கட்டிடங்கள், ஆழ்குழிகள், அதிலே குற்றுயிராகக் கிடந்திடும் வீரர்கள் இவைகளையே கண்டு கண்டு புண்ணாகிப் போயிருந்த கண்களில், இனி வாழ்வு தெரியும். மாடு மனை தெரியும்; மக்கள் சுற்றம் தெரிவர்; விருந்து மண்டபம் தெரியும்; விழாக்கோலம் தெரியும்; பூங்கா தெரியும்; ஆங்கு உலவும் பூவையின் புது மலர்முகம் தெரியும்; கண்கள் களிநடமிடும்.