பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இரும்பு

"மறுபடியும் குத்தகைக்குக் கொடுமய்யா! எப்போதும் போலத் தொகை கொடுத்து வருகிறேன். பாடுபட்டு, பண்ணையை நடத்தி" என்கிறாள் பாவை. "உனக்கா! ஊர் என் முகத்திலே காரித் துப்பும்! ஜெர்மானிக்காரனுடன் திருட்டுத்தனமாக தொடர்பு கொண்டவளல்லவா நீ! உன் அப்பனே அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செத்தானே! நீதானே அவனைக் கொன்று போட்டாய்! உனக்கு என் பண்ணையைக் குத்தகைக்குத் தரமுடியாது. விரைவில் வெளியேறு" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் மிராசுதாரன்.

ஊர் மக்கள் கொண்டிருந்த வெறுப்பு மாறவில்லை. இங்கு எவரும் ஆதரிக்கமாட்டார்கள்; தங்கும் இடமும் தரமாட்டார்கள்; தொழிலும் நடத்த விடமாட்டார்கள் என்பது புரிந்துவிட்டது. மோனாவின் மனம் உடைந்து விடுவது போலாகிவிட்டது. ஆஸ்க்கார் கூறினான்: "கலக்கம் வேண்டாம்! நாம் வாழ வழி இருக்கிறது. நான் ஜெர்மானியன் என்றாலும், பிரிட்டனில் ஒரு தொழில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தேன். போர் மூண்டதும் ஜெர்மானியன் என்பதால் என்னைச் சிறைப்பிடித்தார்கள். நான் தவறேதும் செய்தவன் அல்ல என்பதும் ஜெர்மனியில் கெய்சர் மேற்கொள்ளும் போக்கினைக் கண்டிப்பவன் என்பதையும் நான் வேலை பார்த்த தொழில் நிலையத்தார் அறிவர். அப்போதே எனக்கு உறுதி அளித்தார்கள், 'போர் முடிந்து புது உறவு மலர்ந்ததும் நீ இங்கேயே வேலைக்கு வந்து அமரலாம்; உனக்காக அந்த வேலை காத்துக் கொண்டே இருக்கும்' என்பதாக. இப்போது அதை நினைவுபடுத்திக் கடிதம் எழுதுகிறேன். வேலை கிடைத்துவிடும்; பிரிட்டன் சென்று வாழ்ந்திடலாம்; போர்க்காலத்து நிகழ்ச்சிகள் கெட்ட கனவுபோல கலைந்தோடிப் போய்விடும். இல்லறம் எனும் நல்லறத்தின் இன்பம் பெறுவோம்; இனத்தைக் காட்டி ஒன்றுபட்டுவிட்ட இதயங்களைப் பிரித்திட முடியாது என்பதை உலகு உணரட்டும்" என்றான். இசையென இனித்தது அவன் பேச்சு. ஆனால் சின்னாட்களில் இடியெனத் தாக்கிற்று, பிரிட்டிஷ் தொழில் நிலையம் அனுப்பி வைத்த பதில் கடிதம். 'வேலை இப்போ-