பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

45

தைக்கு இல்லை! போர் முடிந்து விட்டது என்றாலும் ஜெர்மானியர்கள், பரவிவிட்டுள்ள வெறுப்புணர்ச்சி குறையவில்லை. இந்நிலையில் தொழில் நிலையத்தில் ஒரு ஜெர்மானியனை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தாக முடியும்' கடிதம் இந்தக் கருத்துடன். ஆஸ்க்கார் அழவில்லை; சிரித்தான்! வெறுப்புணர்ச்சியின் பிடியிலே உலகே சிக்கிவிட்டிருப்பதை எண்ணிச் சிரித்தான்! போர் எங்கே நின்றுவிட்டது! "சமாதானம் மலர்ந்துவிட்டது என்கிறார்களே, எங்கே அதன் மணம்! பகை உணர்ச்சி ஒழியா முன்பு போர் நின்றுவிட்டது என்று கூறுவது பொருளற்ற பேச்சு. மோனா! போர் நடந்தபடி இருக்கிறது. இதோ பார் கடிதத்தை! ஒரு ஜெர்மானியனை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாதாம்! ஆபத்தாம்!" ஆஸ்க்காரின் பேய்ச் சிரிப்புக் கேட்டு மோனா பயந்துவிட்டாள்! நிலைமையை அறிந்து கண்கலங்கினாள்.

அமெரிக்கா, இனவெறி அற்ற இடம்; யாரும் சென்றிடலாம்; தாயகமாகக் கொண்டிடலாம் என்ற செய்தி அறிந்தனர் காதலர். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரே வெள்ளக் காடாக இருக்கையில் தொலைவிலே ஒரு பசுமையான இடம் தெரிந்தால் மகிழ்ந்திடும் புள்ளினம் போலாயினர். புறப்படுவோம் அமெரிக்காவுக்கு; புதிய உலகுக்கு; இனபேதமற்ற சமுதாய நெறி தவழ்ந்திடும் நாட்டுக்கு என்று எண்ணினர். ஆனால் அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது. 'எந்த இனத்தவரும் அமெரிக்கா வந்து குடியேறலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு பணத்தோடு வந்தால் மட்டுமே இடம் கிடைக்கும். ஒரு வசதியுமின்றி புகுந்துகொண்டு நாட்டுக்குப் பாரமாக இருக்கக் கூடாது' என்ற நிபந்தனை குறுக்கிட்டது.

பண்ணை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக மோனா தனக்குச் சொந்தமான பசுக்களை விற்றுவிட்டாள். அவளிடம் இருந்த செல்வம் பசுக்கள் மட்டுமே! ஆகவே இப்போது அவள் பரம ஏழை! ஆஸ்க்காரோ 'கைதி'யாக இருந்தவன்! இருவரும் பணத்துக்கு என்ன செய்யமுடியும்? அமெரிக்காவை மறந்துவிட வேண்டியதுதான்.