பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இரும்பு

அது பொருள் உள்ளவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் பொன் விளையும் பூமி. ஏழைக்கு அங்கு இடமில்லை! வேறு என்ன செய்வது? வாழ இடம்? வாழ வழி?

தயங்கித் தயங்கிக் கூறினான் ஆஸ்க்கார்: "மோனா நீ மட்டும் சம்மதித்தால், நாம் நிம்மதியாக வாழ, மதிப்புடன் குடும்பம் நடத்த வழி இருக்கிறது. போரை மறந்து, போர் கிளறிவிட்ட பகை உணர்வை மறந்து ஜெர்மனிக்கு வந்திருக்கச் சம்மதித்தால், நாம் இருவரும் அங்கு சென்று வாழ்ந்திடலாம். அம்மா அன்புள்ளம் கொண்டவர்கள். என் வாழ்வை தன் வாழ்வு என்பவர்கள். உன்னைக் கண்டால் பூரித்துப் போவார்கள்! போகலாமா!" என்று கேட்டான். மோனா சம்மதித்தாள். இடம் எதுவாக இருந்தால் என்ன, அவருடன் இருந்திடும் இடமே எனக்குத் திருஇடம் என்று கருதினாள். ஆர்வத்துடன் கடிதம் எழுதினான் ஆஸ்க்கார் தன் அன்னைக்கு. பதில் வந்தது, இருவர் நெஞ்சிலும் நெருப்பை வாரிக் கொட்டுவது போல.

'எப்படியடா மனம் துணிந்தது, நம்மை நாசமாக்கிய பிரிட்டிஷ் இனத்தின் பெண் ஒருவளைக் காதலிக்க? அவர்கள் நமக்குச் செய்த கொடுமையை எப்படி மறந்துவிட முடிந்தது. உன் தங்கை, பத்து வயதுச் சிறுமியைக் கொன்றது பிரிட்டிஷ் குண்டு என்பதையும் மறந்தனையா? காதல் கண்ணை மறைக்கிறதா! என் மகனா நீ! ஜெர்மானியன் தானா நீ? நாட்டை விடப் பெரியவளோ உன்னை மயக்கிவிட்ட கள்ளி' என்றெல்லாம் கண்டனச் சொற்களைக் கொட்டியிருந்தாள் மூதாட்டி அந்தக் கடிதத்தில்.

போர் முடிந்துவிட்டது என்றால் புது நேசம் பிறந்து விட்டது, பகை அழிந்துவிட்டது, பாசம் பிறந்துவிட்டது என்பதல்ல பொருள்; பீரங்கி ஓசை இல்லை, படை கொண்டு தாக்குதல் இல்லை. ஆனால் ஜெர்மானியர் ஜெர்மானியர்தான்! பிரிட்டிஷார் பிரிட்டிஷார்தான் - வெவ்வேறு இனம்! என்ற கருத்து பீடித்துக் கொண்டிருக்கிறது என்பதனை இருவரும் உணர்ந்தனர். வெறுப்புணர்ச்சியற்ற ஒரு நாடே கிடையாதா! இனத்தை மறந்து இதயங்கள் ஒன்று பட்டதால்