பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

47

கடிமணம் புரிந்து கொண்டு வாழ்ந்திட இடமளிக்கும் நாடே கிடையாதா என்று எண்ணி ஏங்கிக் கிடந்தாள்.

'ஒன்று இருக்கிறது! போரும் பகையும் அற்ற இடம்; விரோதமும் குரோதமும் அற்ற இடம்; மனிதர்களாக வாழக்கூடிய இடம்; வெறுப்புணர்ச்சி நுழைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது மோனா!' அவன் கூறுகிறான்; அவள் திடுக்கிட்டுப் போகிறாள்; மறுகணம் உறுதி பெறுகிறாள்; 'உண்மைதான் ஆஸ்க்கார்! அந்த இடமே பகைப்புயல் வீசாத இடம்; நிம்மதியாக வாழ்ந்திட ஏற்ற இடம். அதனால் அங்கு நீ மட்டுமா செல்வது; எனக்கும் அதே இடம்தான்; இருவருமே செல்வோம். நமக்கு ஏற்ற அந்த இடத்துக்கு' என்கிறாள் மோனா. அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், கொந்தளிக்கும் கடல்! மரணபுரியில் மட்டுமே நாம் வாழ்ந்திட முடியும்; மக்களை மாக்களாக்கிடும் வெறுப்புணர்ச்சி தீண்டாத இடம் அதுவே. வேறு எந்த இடமும் நம்மை ஏற்றுக்கொள்ளாது! உன் இனம் என்ன? என்று கேட்கும்! உன் மரபு என்ன? என்று கேட்கும். மரணபுரியில் மட்டுமே அந்தக் கேள்விகள் எழுவதில்லை. மான் தீவிலே இடம் இல்லை! பிரிட்டன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அமெரிக்காவிலே தங்கிட அனுமதி இல்லை. ஜெர்மனி துரத்துகிறது, 'உள்ளே நுழையாதே; இடம் கிடையாது' என்று. அதோ ஆழ்கடல்! கொந்தளித்தபடி இருக்கிறது. அலைக்கரம் நீட்டி வா! வா! என்று அழைக்கிறது; காதலால் கட்டுண்ட என் மக்களே! நாடு பலவும் உங்களை வாட்டுகின்றனவா, இனபேதம் கிளறிவிடும் வெறுப்புணர்ச்சியால். கவலைப்படாதீர்கள்! இதோ நான் இருக்கிறேன், உங்களை ஆரத்தழுவி வரவேற்றிட! இங்கு இனபேதம், கிளறிவிடும் பகை உணர்ச்சி கிடையாது. வந்திடுவீர்! என்று கூவி அழைக்கிறது. பல நாடுகள் இடமளிக்க மறுத்து விட்டன இந்தக் காதலருக்கு; காதலின் மேன்மையினை அறிந்திடும் திறனற்று. இதோ இந்த இடமே நமக்கு ஏற்ற இடம் என்று வருகின்றனர்! என் பெருமை உணர்ந்து வருகின்றனர்! - என்ற மகிழ்ச்சிப் பெருக்கில்தான் கொந்தளிக்கிறதோ!

உறுதி பிறந்துவிட்டது; புது உற்சாகமே வந்துவிட்டது; இருவரும் புறப்படுகின்றனர், தமக்கு ஏற்ற நாடு நோக்கி.