பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இரும்பு முள்வேலி

குன்றேறுகிறார்கள்! மேலே செல்கின்றனர்! பகை உணர்வும் வெறுப்புணர்ச்சியும் நெளியும் இடம், அதோ கீழே, காலடியில்! அவர்கள் உயரச் சென்றுவிட்டனர்! குன்றேறிப் பார்க்கின்றனர்; கீழே ஆழ்கடல்! அலைக்கரங்கள் அழைக்கின்றன.

ஆரத் தழுவிக் கொள்கின்றனர். மேலே வானம்! கீழே கடல்! மணமேடையோ சிறு குன்று!! இயற்கையோ எழிலளிக்கிறது மணவீட்டுக்கு! எதிர்ப்பார் இல்லை! ஏளனம் பேசுவார் இல்லை! இனம் வேறு வேறு அல்லவோ என்று குளறுவார் இல்லை. காதலரிருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்! அந்த இன்பத்தில் திளைத்திருந்தனர், புது வாழ்வு பெற்ற இருவரும்.

ஆஸ்க்கார், தனது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை எடுத்து, மோனாவையும் சேர்த்துத் தன்னுடன் பிணைத்துக் கொண்டான். ஈருடல் ஓர் உயிர்! அந்த ஈருடலும் கூட ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கட்டும் என்று எண்ணினான் போலும்.

கண்களைக் கண்கள் கவ்விக் கொண்டன.

அந்த கண்கள் என்னென்ன பேசிக் கொண்டனவோ! ஒரு புன்னகை பூத்திருக்கும்! இதழமுது சுவைத்திருப்பர்! நம் காலடியில் கிடக்கிறது குள்ள மனம் படைத்தோர் இருக்கும் இடம்! அவர்கள் தொட முடியாத உயரத்தில் நாம் நிற்கிறோம்; காதலின் சிகரத்தில்! இனி... சென்று சேர்ந்தனர் கடலடி. மரணபுரி அவர்களை வரவேற்றுக் கொண்டது. மாதாகோயிலில் மணி ஓசை கிளம்புகிறது. போர் முடிந்தது; பகை ஒழிந்தது; சமாதானம் மலர்ந்தது என்று அந்த ஓசை கூறுகிறது என்பர்!

இல்லை! போய்ச் சேர்ந்தனர்; போரற்ற, பகையற்ற, பேதமற்ற, வெறுப்பற்ற இடம் போய்ச் சேர்ந்தனர் என்றல்லவா ஒலி அறிவிக்கிறது!

காதற் பயணம் முடிந்தது. போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்! வாழ்க காதல் என்று ஒலிக்கிறதோ!!