பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

7

நம் நாடு தாக்கப்படுகிறது! நமது தன்மானம் தாக்கப்படுகிறது!! என்ற எண்ணம் உள்ளத்தை எரிமலையாக்குகிறது; வெடித்துக் கொண்டு கிளம்புகிறது கோபம், கொதிப்பு, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், பகைவனை அழித்தொழிக்க வேண்டும் என்ற துடிப்பு.

போர் மூண்டிடாதபோது எவையெவை 'வெறி' என்று கருதப்படுமோ அவை யாவும், தேவைப்படுவனவாக, வர வேற்கப்படுவனவாக, போற்றப்படுவனவாக ஆகிவிடுகின்றன.

"இப்படியா இரக்கமின்றி அடிப்பது. அவனும், பாவம் மனிதன் தானே" என்று மனம் உருகிப் பேசிடும் நல்லோர் கூட, மெல்லியலார் கூட, "சுட்டுத் தள்ளவேண்டும்! வெட்டி வீழ்த்த வேண்டும்! பூண்டோ டு அழிக்கவேண்டும்!" என்று பேசுகின்றனர் - போர் மூட்டிவிடும் வெறி உணர்ச்சி காரணமாக! அந்த உணர்ச்சியை வெறி என்று கூடக் கூறிடத் துணிந்திடார்! கவிதைகள் இயற்றப்படுகின்றன, அந்த 'எழுச்சி' பற்றி.

நாடு வாழ்ந்திட எதனையும் செய்திடுவேன்! - என்ற பேச்சுக்குப் பெரியதோர் மதிப்புக் கிடைக்கிறது. எதனையும் செய்திடுவேன்! படுகொலைகள் கூட! பச்சிளங் குழந்தைகளைக் கொன்றிடும் பாதகம் கூட! போர்க் கோலத்தில், "கொல்லு! இல்லையேல் கொல்லப்படுவாய்!" என்பதுதான் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் - போரிடும் இரு நாடுகளிலும்!

ஒரு நாடு மற்ற நாட்டின் மீதே எல்லாப் பழிகளையும், எல்லா கெடு நினைப்பினையும் ஏற்றி வைக்கும்; காட்டு மிராண்டிகள்! கொலை பாதகர்கள்! வெறியர்கள்! மனித மாண்பு அறியாதவர்கள்! - என்று கண்டனக் கணைகள் கிளம்பிடும், இருபுறமுமிருந்து.

போர் ஓய்ந்து, ஓர் புது உறவு ஏற்பட்ட பிறகுதான், உண்மை வெளியே தலைகாட்டும், தைரியமாக! போர் துவங்கியதும், உண்மை ஓடி ஒளிந்து கொள்கிறது.