பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இரும்பு

வெறி பிடித்தலையும் சிலரால் மூண்டது இந்தப் போர் என்று, போர் ஓய்ந்த பிறகுதான் பேசப்படும் - போர் நடக்கும்போது அந்த நாட்டு மக்கள் அனைவரையுமே வெறியர்கள், காட்டுமிராண்டிகள், இரத்தம் குடிப்பவர், பிணம் தின்பவர், கற்பழிப்பவர், கயவர் என்றுதான் பேசுவர் - ஒருவர் தவறாமல்.

யாரேனும் ஒருவர் இவ்விதம் பொதுப்படையாக ஒரு நாட்டு மக்கள் எல்லோரையும் மொத்தமாகக் கண்டிப்பது முறை அல்ல என்று கூறிடின், அவனுடைய நாட்டுப் பற்று பற்றிய பலமான ஐயப்பாடு எழும்; அருவருப்பு கிளம்பும்; அவன் 'தேசத்துரோகி' ஆக்கப்பட்டுவிடுவான்.

தேசத்துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - எதிரிக்கு உளவாளி - எதிரியைவிடக் கொடியவன் - இழி மகன் - என்றெல்லாம் அவன் கண்டிக்கப்படுவான்; தனது நிலைமையை விளக்கிட அவன் முனைந்தாலோ, மக்களின் ஆத்திரம் மேலும் வளரும்; அவனை வெட்டி வீழ்த்திடக் கிளம்புவர்.

இந்தக் கரத்தால் - இந்த வாள் கொண்டு - பகைவர் இருபதின்மரைக் கொன்றேன்.

துரத்தினேன்! அவன் ஏற்கனவே அடிபட்டவன். ஆகவே வேகமாக ஓடிட முடியவில்லை. களத்திலே இருள் கப்பிக் கொண்டிருந்தது. படை கிளப்பிய தூசியால்! எதிரில் யானை விரண்டோ டி வருவது அவன் கண்களில் படவில்லை - சிக்கிக் கொண்டான்; காலின்கீழ் போட்டு... ஆ! என்றான் ஒருமுறை; ... ஒரே ஒரு முறை... பிறகு... கூழ்! கூழாகிப் போனான்!

இப்படிப் பல நிகழ்ச்சிகளைத் தன் வீரத்திற்குச் சான்றுகளாகக் கூறுவான், களம் சென்று திரும்பியவன்; கேட்போர் மகிழ்வர்; அவனை நாட்டைக் காத்த நாயகன் என்று பாராட்டுவர்.