பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

காணல் கவித்த படுகையை யொட்டி உயர்ந்த கரை. அங்கு, அதிகத் தண்ணீரை நம்பி வாழாத ஒருவகைக் கொடி பேயாய் படர்ந்து கிடக்கும். மழை பெய்து நின்ற சில நாட்களுக்குப் பிறகு பார்த்தால் கரை பூராவும் ஒரே பச்சைக்காடுதான். அப்புறம் சில தினங்களிலேயே ஏகமாகப் பூக்கள் மலர்ந்து திகழும். பழைய காலத்துப் 'பூவந்திராப் பெட்டி' (கிராமபோன்)களில் ஒலிபெருக்கி களாகக் குழாய்கள் வைத்திருப்பார்களே, அவை போல . ஊமத்தம் பூ இனத்தைச் சேர்ந்த - புஷ்பங்கள் வானைப் பார்த்து வாய்பிளந்து கிடக்கும். அவற்றின் நிறத்தை வாடாமல்லி வண்ணத்தின் மங்கிய தோற்றம் என்றும் கொள்ள முடியாது; பழுப்பு என்றும் கூறமுடியாது. சம்பா அரிசிக் கழுநீரின் நிறத்தை அதனுடன் ஏகதேசமாக ஒப்பிடலாம்.

அவ்விதம் அடர்ந்து கிடக்கும் கொடிகளிடையே யாராவது அஜாக்கிரதையாக நடக்க முயன்றால் முழங்கால் வரை உள்ளே போய்விடும். காலை வெளியே இழுத்து மறு எட்டு வைத்து அடி அடியாக முன்னேறுவது என்பது கத்திக் கம்பிமீது கடக்கிற சர்க்கஸ் வித்தை மாதிரித்தான். யாரையாவது கழுத்தைக் திறுகி உள்ளே வீசிவிட்டால் அந்த ஆசாமி மரகதப் பசுக்கொடிச் சமாதியிலே நிம்மதியாக ஓய்வு பெற்றுக் கிடக்கலாம்.

இந்தப் பகுதியை ஒட்டி அழகான தோப்புகள். மா மாக்கள், தென்னை, சவுக்கை முதலியவைகளுடன் நாலைந்து தேக்கு மரங்களும் நன்கு வளர்ந்து நின்றன. விவசாய இலாக்காவினரின் போதனைகளில் அக்கறை கொண்டு புதிய புதிய பயிர்ச் சோதனைகளில் ஈடுபட்ட புண்ணியவான் யாரோ ஒருவர் பல வருஷங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் வாசஞ் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள் அந்த ஊரிலே. தோப்புகளின் நடுவிலே கம்பீரமாக நின்றது அந்த பங்களா. வாழ்க்கை வசதிகள் பலவும் அங்கு நிறைந்திருக்கும்.