பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. இரண்டு மல்லர்கள்

 யர்லாந்தின் ஹெர்க்குலிஸ் என்று புகழப்பெற்ற மாமல்லனாகிய ஃபின் மக்கெளல் என்பவனைப்பற்றிக் கேள்விப்பட்டிராத ஆணோ பெண்ணோ குழந்தையோ நாட்டில் கிடையாது. கிளீயர் முனையிலிருந்து அசுரன் தாம்போதிவரை எல்லா மக்களும் அவனைப்பற்றித் தெரிந்திருந்தனர். அசுரன் தாம்போதியிலிருந்துதான் நமது கதையும் தொடங்குகின்றது. வல்லமை மிக்க மக்கெளலும் அவனுடைய உறவினர்களும் அந்தத் தாம்போதியை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சமயம் மக்கெளல் ஊருக்குப் போய்த் தன் மனைவி ஊனாக் என்பவளைப் பார்த்துவர விரும்பினான். அவளிடம் அவனுக்குப் பிரியம் அதிகம். இரவு நேரத்தில் அவளுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுவதுண்டு; ஆகையால், அவளுடைய உடல் நிலையை அறிந்துவர அவன் புறப்பட்டான். நடக்கும் பொழுது கையிலே பிடித்து ஊன்றிக்கொள்வதற்காக, அவன் ஒரு தேவதாரு மரத்தை வேரோடு பிடுங்கி, கிளைகளை ஒடித்தெறிந்துவிட்டு, அதையே கழியாக எடுத்துக்கொண்டான்.

மக்கெளலின் வீடு நாக்மேனி என்ற குன்றின் உச்சியில் அமைந்திருந்தது. அங்கிருந்து நோக்கினால் குல்லமோர் மலை முழுதும் தெரியும்.

மக்கெளல், மனைவியைப் பார்க்கத்தான் புறப்பட்டுச் செல்வதாக எல்லோரும் எண்ணினார்கள். அதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் உண்டு. அந்தக் காலத்தில் குகுல்லின் என்று வேறு ஒரு மல்லனும் இருந்தான். அவனை மல்லன் என்பதைவிட அசுரன் என்று சொல்வது பொருந்தும். அவன் உருவமும் ஆற்றலும் அப்படிப் பட்டவை. சிலர் அவனை ஐரிஷ்காரன் என்பார்கள். வேறு சிலர் அவன் ஸ்காட்லாந்து நாட்டான் என்றும் சொல்வார்கள். அந்தக் காலத்தில் அவன் கிளம்பிவிட்டால்,