பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

இறையனார் அகப்பொருள்

[களவு


பாயிரத்தின் இன்றியமையாமை

பாயிரம் என்ற சொற்குப் பொருள் யாதோ எனின், புறவுரை என்றவாறு.
ஆயின், நூல் கேட்பான் [1]புகுந்தே நூல் [2]கேளாது புறவுரை [3]கேட்டு [4]என்பயன் எனின், நூற்குப் புறனாக வைத்தும் நூற்கு இன்றியமையாதது, ஆதலின் என்க.
என் போலவோ எனின், கருவமைந்த மாநகர்க்கு உருவமைந்த வாயில்மாடம் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும், தகை மாண்ட நெடுஞ் சுவர்க்கு வகைமாண்ட பாவை போலவும் என்பது.
ஆகலின் பாயிரங் கேட்டே நூல் கேட்கப்படும்.

 
பொதுப்பாயிரம்

அவற்றுள், அப் பொதுப்பாயிரந்தான் நான்கு வகைப்படும் : அவை, ஈவோன் தன்மையும், ஈதலியற்கையும், கொள்வோன் தன்மையும், கோடல் மரபும் என.

என்னை ,

"ஈவோன் தன்மை யீத லியற்கை
கொள்வோன் தன்மை கோடல் மரபென
ஈரிரண் டென்ப[5] பொதுவின் இயற்கை'

என்பதாகலின்.

ஈவோன் தன்மை என்பது - ஆசிரியனது தன்மை என்றவாறு;
ஈதலியற்கை என்பது - அவன் உரைக்கும் முறைமை என்றவாறு;
கொள்வோன் தன்மை என்பது - மாணாக்கனது தன்மை என்றவாறு;
கோடல்மரபு என்பது - அவன் கேட்கும் முறைமை என்றவாறு.

அவை யெல்லாம் விரித்துரைப்பிற் பெருகும்; [6]விரிந்த நூலிற் கண்டுகொள்க.

சிறப்புப்பாயிரம்

இனிச் சிறப்புப்பாயிரம் எட்டு வகைப்படும். அவை யாவையோ எனின், ஆக்கியோன் பெயரும், வழியும், எல்லையும்,


  1. புகுந்தோன்
  2. கேளாமுன்
  3. கேட்பது
  4. என்னையோ
  5. இயல்புணர்ந் தோரே!
  6. முடிந்த