பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இறையனார் அகப்பொருள்

[களவு



நூல் என்றதன் சொற்பொருள்

இனி, நூல் என்ற சொற்கும் பொருள் உரைக்கப்படும்: நூல் போறலின் நூல் என்ப, பாவைபோல்வாளைப் பாவை என்றாற்போல. நூல்போறல் என்பது,நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளாற் கைவல்மகடூஉத் தனது செயற்கைநலந் தோன்ற ஓரிழைப்படுத்தலாம் உலகத்து நூல் நூற்றல் என்பது. அவ்வாறே, சுகிர்ந்து பரந்த சொற்பரவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வுமாட்சியிற் பிண்டம் படலம் ஒத்துச் சூத்திரம் என்னும் யாப்பு நடைப் படக் கோத்தல் ஆயிற்று, நூல்செய்த லாவது; அவ்வகை நூற்கப்படுதலின் நூல் எனப்பட்டது.

இனி, ஒருசாரார் நூல் போலச் செப்பஞ் செய்தலின் நூல் என்ப.

இனித், தந்திரம் என்னும் வடமொழிப் பொருளை நூல் என வழங்குதல் தமிழ் வழக்கு எனக் கொள்க. இது நூல் என்ற சொற்குப் பொருள்.

நூல் நுதலியது

இனி, நூல் முதலிய தூ உம் உரைக்கற்பாலது. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்; தமிழ் நுதலிற்று என்பது.
தமிழ் நான்கு வகைப்படும், எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் என.

அதிகாரம் நுதலியது

அவற்றுள், இவ்வதிகாரம் என்னுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோ எனின், பொருள் ஆராய்தலை நுதலி எடுத்துக் கொள்ளப்பட்டது. இனி, அதிகாரம் நுதலியது எல்லாம் அதிகாரத்துள் ஒத்து நுதலாவன்றே, பல ஒத்துக்கொண்டது ஓர் அதிகாரமாகலான்.

இதனுள் இவ்வோத்து என்னுதலி எடுத்துக் கொள்ளப் பட்டதோ எனின், ஒத்தினது பன்மையின்மையின் ஒத்து இன்று என்பது.


சூத்திரம் நுதலியது

இனிச், சூத்திரம் நுதலியதூஉம் உரைக்கற் பாலது. இச் சூத்திரம் என் நுதலிற்றோ எனின் — சூத்திரம் உரைக்கின், அது நான்கு வகையான் உரைக்கப்படும். கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத்திரட்டி அகலங்கூறல் என.